அப்பாவின் வருமானத்தை அறிந்து பிள்ளைகள் செலவு செய்ய வேண்டும் அதே போன்று அரசின் நிலைமை அறிந்து மக்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் - அங்கஜன் - News View

Breaking

Friday, August 27, 2021

அப்பாவின் வருமானத்தை அறிந்து பிள்ளைகள் செலவு செய்ய வேண்டும் அதே போன்று அரசின் நிலைமை அறிந்து மக்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் - அங்கஜன்

பிள்ளைகள் அப்பாவின் வருமானத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதே போன்று அரசாங்கத்தின் தற்போதைய நிலைமை அறிந்து நாட்டு மக்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இணைய வழி நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டினை முடக்குமாறு பலர் கோரிக்கை விட்டிருந்தனர். அதில் ஒரு சில நியாயங்கள் உள்ளன. மறுபுறம் நாட்டினை முடக்குவதால் பொருளாதார ரீதியாக சிக்கல்கள் ஏற்படுகின்றன. நாளாந்தம் உழைத்து வாழ்பவர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர். 

கடந்த காலகட்டத்தில் நாட்டில் நீண்ட முடக்கம் ஏற்பட்ட போது இரண்டு தடவைகள் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு, புது வருடக் கொடுப்பனவு ஆகியன வழங்கப்பட்டன. இம்முறையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலைமை அதற்கு தடை போடுகின்றது. 

எந்தக் காலகட்டத்திலும் சந்திக்காத மிகப்பெரிய சவால் தற்போது நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை வருமானம் உள்ளிட்ட திறைசேரிக்கு கிடைக்கும் பல வருமானங்கள் கொரோனா நிலைமையால் தடைப்பட்டுள்ளன. வருமானங்கள் இன்றி மக்களின் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும். அதேசமயம் நாட்டினையும் முன்னே கொண்டு செல்ல வேண்டும். 

யுத்தத்தை விட மிகப்பெரிய சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சவால்களின் மத்தியிலும் சிறப்பான மக்களை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

சவால்களுக்கு மத்தியிலும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம், இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கல் ஆகியன சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

யாழ் மாவட்டத்தில் உள்ள இரண்டு இலட்சம் குடும்பங்களில் 57,000 குடும்பங்கள் இரண்டாயிரம் ரூபாய் பெறத் தகுதியுடையனவாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad