(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கொரோனா பரவலுக்கான குற்றச்சாட்டிலிருந்து நழுவி, அரசாங்கம் அந்த குற்றச்சாட்டை மக்கள் மீது சுமத்த முயற்சிக்கிறது. மக்களின் மரணத்தை அரசியலாக்கத் தயாராக இருக்கும் ஒருவரைத் தவிர இந்த நேரத்தில் நாட்டைத் திறந்து வைக்க வேண்டும் என்ற முடிவை யாராலும் எடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரம் குறித்த ஒரு பயத்தை உருவாக்கி நாட்டை மூடுவதற்கு அரசாங்கம் ஒரு முடிவை எடுக்காதுள்ளது. பொருளாதாரம் அல்லது ஒட்சிசன் என்ற இரண்டில் எது முக்கியமானது என்று புரியாத அரசாங்கத்திடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
மனித உயிருக்கு சந்தையில் விலை கொடுக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் காணப்பட்டாலும் மனச்சாட்சியற்ற ஆட்சியாளர்கள் அதை இன்னும் கவனத்திற் கொண்டதாகத் தெரியவில்லை.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான சுகாதார விஷேட நிபுணர்களின் தீர்க்கமான எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் தனது பொறுப்பற்ற, தன்னிச்சையான அரசியல் நிகழ்ச்சி நிரலை மட்டுமே செயல்படுத்தி வருகிறது என்றார்.
No comments:
Post a Comment