அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலைகள் தொடர்பில் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் வாசுதேவ - News View

Breaking

Tuesday, August 31, 2021

அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலைகள் தொடர்பில் அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் வாசுதேவ

அமீன் எம் ரிழான் 

நாட்டில் நிலவி வரும் தொற்று நோய் நிலைமையிலும் மோசடி வியாபாரிகள் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை அதிகரித்து பொதுமக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கும் வகையிலும் அதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் செயற்பாடு ஒன்றுக்கு வழிவகுக்கும் வகையிலும் செயற்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் இதுவரை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தற்பொழுது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தமுறை நாட்டை முடக்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு முன்னரும் பல நகரங்களில் நுகர்வுப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் காணப்பட்ட விலைகள் தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் கண்டறிந்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டார். 

சில வர்த்தகர்கள் தாம் நினைத்த வகையில் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதை இதன்போது காணமுடிந்தது எனவும் நாட்டை முடக்கியதன் பின்னர் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு விலைகளை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, இதுவரை அரசாங்கம் தலையிட்டு களஞ்சியங்களில் மறைத்து வைத்துள்ள அரிசி மற்றும் சீனி வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையின் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை பாராட்டத்தக்கது. இதற்கு மக்கள் மத்தியிலும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. 

அதே போன்று அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை சலுகை விலையில் ச.தொ.ச மற்றும் கூட்டுறவு வலையமைப்பின் ஊடாக வினியோகிப்பதும் விரைவில் இடம்பெற வேண்டும். 

மேலும் கடந்த காலங்களில் நாட்டை முடக்கிய போது வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது மேற்கொள்ளப்பட்ட பொறிமுறை மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என தான் நினைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மோசடி வியாபாரிகளின் பிடியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசு கட்டாயம் மொத்த விற்பனையில் தலையிட வேண்டும். அதேபோன்று நான் ஏற்கனவே கூறியதைப் போன்று சட்டங்களை நடைமுறைப் படுத்தும் போது மொத்த விற்பனையை உரியமுறையில் கட்டுப்படுத்த முடியுமானால், நுகர்வோருக்கு வாய்ப்பான வகையில் வர்த்தகத்தை செயற்படுத்த முடியும் என தான் நம்புவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment