232 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் இலங்கை கடற்படையினரால் மீட்பு : அஹுங்கல்ல, பலபிட்டி, ஹபராதுவவைச் சேர்ந்த 5 சந்தேகநபர்கள் கைது - News View

Breaking

Tuesday, August 31, 2021

232 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் இலங்கை கடற்படையினரால் மீட்பு : அஹுங்கல்ல, பலபிட்டி, ஹபராதுவவைச் சேர்ந்த 5 சந்தேகநபர்கள் கைது

290.2 கிலோ கிராம் ஹெரோயினைக் கொண்ட பல நாள் மீன்பிடி விசைப்படகொன்றுடன் 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலுக்கமைய, நேற்றையதினம் (30) ஆழ்கடலில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கரையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்டபோது, குறித்த போதைப்பொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதன்போது 10 உரப் பைகளில் 259 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அதற்கமைய ஹெராயின், குறித்த மீன்பிடி விசைப்படகு மற்றும் அதிலிருந்த 5 சந்தேக நபர்களை கைது செய்த கடற்படையினர் இன்று (31) காலை சந்தேகநபர்களுடன் படகை கரையை நோக்கி கொண்டு வந்துள்ளனர்.

குறித்த பல நாள் மீன்பிடி விசைப்படகு கடந்த ஜூலை 30ஆம் திகதி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதோடு, சர்வதேச கடற்பரப்பில் வைத்து வெளிநாட்டு கடத்தல் காரர்களால் போதைப் பொருளை கைமாற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகுதியின் தெரு மதிப்பு ரூ. 2,321 மில்லியனுக்கும் (ரூ. 232.1 கோடிக்கும்) அதிகமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 முதல் 37 வயதுக்குட்பட்ட அஹுங்கல்ல, பலபிட்டி, ஹபராதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment