கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மாரும் தடுப்பூசியை பெற எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை : விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மாரும் தடுப்பூசியை பெற எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை : விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன

(எம்.மனோசித்ரா)

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மாரும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. பிறக்கவிருக்கும் சிசுவையும், பிறந்த சிசுவையும் பாதுகாப்பதற்கு இயன்றளவு விரைவாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வலியுறுத்துவதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது கொவிட் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளில் பெருமளவானோருக்கு குருதி உறைதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் என்பன ஏற்படுகின்றன. இந்த நிலைமை தீவிரமடையுமாயின் அது பிறக்கவுள்ள அல்லது பிறந்த சிசுவின் உயிரிருக்கும், தாயின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும்.

எனவே இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். தடுப்பூசி வழங்கப்படும் எந்தவொரு வைத்தியசாலைக்கும் சென்று அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அவ்வாறில்லை எனில் 1906 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது பெயர் , முகவரி உள்ளிட்ட தகவல்களை வழங்கியதன் பின்னர் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய சிரமம் இன்றி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினரின் உயிரைப் பாதுகாக்க வேண்டியது சகலரதும் கடமையாகும் என்றார்.

No comments:

Post a Comment