கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சடலங்களை மன்னாரில் எரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு - News View

Breaking

Tuesday, August 31, 2021

கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சடலங்களை மன்னாரில் எரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கின்றவர்களை மன்னாரிலேயே எரிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது என மன்னார் மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரானிலி டீமெல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக மரணிப்பவர்களை மன்னாரில் எரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஏற்கனவே திட்டங்கள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இவ் திட்டத்தை உடன் முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைப்பாடு எற்பட்டதைத் தொடர்ந்து இது விடயமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டீமெல் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது

நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற இவ் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள். நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், செயலாளர்கள் உட்பட இவை சார்ந்த அதிகாரிகளும் இவ் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டனர்.

இவ் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டவைகள் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டீமெல் தெரிவிக்கையில் தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கின்றவர்களில் முஸ்லிம் சடலங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள ஓட்டமாவடிக்கும், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்த சடலங்களை வவுனியாவுக்கும் எரிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்பொழுது வவுனியாவில் சடலங்களை எரிக்கும் இடத்துக்கு தற்பொழுது முல்லைத்தீவு. கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலிருந்தும் சடலங்கள் வருவதால் வவுனியாவில் சடலங்கள் எரியூட்டும் இடத்தில் நெருக்கடிகள் அதிகம் காணப்படுவதுடன் அதன் இயந்திரமும் தற்பொழுது பழுதடைந்த நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னாரிலிருந்து சடலங்களை வவுனியாவுக்கு கொண்டு வருவதற்கு முன் தங்களின் அனுமதியை பெற்ற பின்பே கொண்டு வரும்படி சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு வவுனியாவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த நிலையில் இவ் சடலங்களை மன்னாரிலேயே எரிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்குடன் இது விடயமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது எனவும் இதற்கமைய 27 மில்லியன் ரூபா செலவில் மன்னார் பொது மயானத்தின் ஒரு பகுதியில் இதற்கான கட்டிடம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி உதவிகளை மன்னார் நகர சபை, பிரதேச சபைகள், பாராளுமன்னற உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் உதவிகளைப் பெற்று இவ் கட்டிடத்தை அமைப்பது எனவும், இதற்கான அடிக்கல்லை வருகின்ற வாரம் நாட்டுவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்வது எனவும் இவ் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment