அரசாங்கம் தனது பலவீனத்தை மூடி மறைக்க தொழிற்சங்கத்தினர் மீது குற்றம் சுமத்துகிறது - முன்னிலை சோசலிச கட்சி - News View

Breaking

Tuesday, August 31, 2021

அரசாங்கம் தனது பலவீனத்தை மூடி மறைக்க தொழிற்சங்கத்தினர் மீது குற்றம் சுமத்துகிறது - முன்னிலை சோசலிச கட்சி

(இராஜதுரை ஹஷான்)

போராட்டங்களினால்தான் கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்தது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசாங்கம் தனது பலவீனத்தை மூடி மறைக்க போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மீது குற்றம் சுமத்துகிறது என முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

முன்னிலை சோசலிச கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து தொழிற்சங்கத்தினர் கடந்த காலங்களில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அமைதியான போராட்டங்களை அரசாங்கத்தின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைத்தனர். அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

போராட்டத்தினால்தான் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்தது என்று அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கான சாட்சியங்கள் ஏதும் கிடையாது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தின் தலைவரும், மாணவர்களும் சிறைச்சாலையில் இருக்கும் போதுதான் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் அரசாங்கத்தின் வசம் கிடையாது. அரசாங்கம் தனது பலவீனத்தை மூடி மறைக்க தொழிற்சங்கத்தினர் மீது பழிசுமத்துகிறது.

கொவிட் வைரஸ் பரவலை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக எழும் மக்களின் எதிர்ப்பினை அரசாங்கம் கொவிட் தாக்கத்தை குறிப்பிட்டுக் கொண்டு முடக்குகிறது. நாட்டு மக்களில் முதலில் தெளிவு பெற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment