அடுத்த இரண்டு வாரங்களில் நோயாளர்கள், மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் : பொருத்தமான முகக்கவசங்களை அணியுங்கள் - News View

Breaking

Saturday, August 7, 2021

அடுத்த இரண்டு வாரங்களில் நோயாளர்கள், மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் : பொருத்தமான முகக்கவசங்களை அணியுங்கள்

அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீடுகளில் இருந்து வௌியேறுமாறும் பொருத்தமான முகக்கவசங்களை அணிந்து செல்லுமாறும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்து வகையான முகக்கவசங்களும் இக்காலத்திற்கு பொருந்தாது என வைத்தியர்களும் விசேட நிபுணர்களும் கூறுகின்றனர். 

COVID நோயாளர்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மிக வேகமாக பரவக்கூடிய பிறழ்வு நாட்டிலுள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

உலக நாடுகள் COVID தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை COVID ஒழிப்பு தேசிய செயலணி என்ற வகையில் முன்னெடுத்துள்ளோம். எனினும், பொதுமக்கள் சுய ஒழுக்கத்துடனும் பாதுகாப்புடனும் செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற முடியும் என சவேந்திர சில்வா மேலும் கூறினார்.

இதனிடையே, முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான அட்டையை தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

அனைவரையும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு மிக வினயமாக கேட்டுக் கொள்கின்றோம். தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லையென்றால் சிற்சில இடங்களுக்கு செல்வதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம். 

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், சில இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை பரிசீலிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்காலத்தில் உருவாகக்கூடும். 

செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திற்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றோம்

No comments:

Post a Comment