இரண்டாம் கட்ட தடுப்பூசியின் பின்னர் பாடசாலைகளை திறக்க எதிர்பார்ப்பு : அதிபர், ஆசிரியர்கள் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் - பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, August 2, 2021

இரண்டாம் கட்ட தடுப்பூசியின் பின்னர் பாடசாலைகளை திறக்க எதிர்பார்ப்பு : அதிபர், ஆசிரியர்கள் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் - பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள ஊழியர்களில் 83 சதவீதமானோருக்கு கொவிட் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தடுப்பூசி இம்மாதம் இறுதி வாரத்தில் வழங்கப்படும். இதன் பின்னர் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க எதிர்பார்த்துள்ளோம். ஆகவே அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை வெளிக்கள சேவையாளர்கள் பாடசாலைகளை திறப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பாடசாலைகளை மீள திறக்கம் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கும், பாடசாலை வெளிக்கள சேவையாளர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் கிடைக்கப் பெற்ற தரவுகளுக்கு அமைய கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேல் மாகாணத்தில் 98 சதவீதமும், ஊவா மாகாணத்தில் 95 சதவீதமும், மத்திய மாகாணத்தில் 84 சதவீதமும்,வடமேல் மாகாணத்தில் 84 சதவீதமும், வட மத்திய மாகாணத்தில் 83 சதவீதமும், அத்துடன் தென் மாகாணத்தில் 83 சதவீதமும், வடக்கு மாகாணத்தில் 82 சதவீதமும், கிழக்கு மாகாணத்தில் 74 சதவீதமும்,சப்ரகமுவ மாகாணத்தில் 52 சதவீதமும், நிறைவுப் பெற்றுள்ளன.

இதனடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள சேவையாளர்களில் 83 சதவீதமானவர்களுக்கு கொவிட்-19 முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. இம்மாதத்தின் இறுதி வாரத்தில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிக்கள சேவையாளர்களுக்கு கொவிட்-19 இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்கள் அனைவரும் இன்று முதல் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் மாதம் முதல் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலைகளை திறப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை வெளிகள சேவையாளர்கள் ஈடுபட வேண்டும்.

No comments:

Post a Comment