எதிர்காலத்தில் மின்சாரத் தடையும் அடிக்கடி ஏற்படும் : அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 14, 2021

எதிர்காலத்தில் மின்சாரத் தடையும் அடிக்கடி ஏற்படும் : அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது - முஜிபுர் ரஹ்மான்

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திடம் டொலர் இன்மையே தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் காரணமாகும். இதே நிலைமை தொடருமானால் எரிபொருள் இறக்குமதியும் மட்டுப்படுத்தப்பட்டு மின்சார விநியோகத்தடையும் அடிக்கடி ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும், கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் தரவுகளை ஆளுந்தரப்பினரே ஏற்க மறுக்கின்றனர். போலியான தகவல்களை வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்தாமல் அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திடம் டொலர் இல்லாததன் காரணமாகவே சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை தொடருமாயின் எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் இறக்குமதி மட்டுப்படுத்தப்படும். எரிபொருள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு அடிக்கடி மின் தடை ஏற்படக்கூடும். இதனால் நாட்டு மக்களுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் கூட தட்டுப்பாடு ஏற்படும்.

எரிவாயு விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கான நிர்ணய விலை 6500 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் அப்பலோ தனியார் மருத்துவமனையில் கூட பி.சி.ஆர். பரிசோதனைக்கு இலங்கை ரூபாவில் 2600 ரூபா மாத்திரமே அறவிடப்படுகிறது. இதேபோன்று பங்களாதேஷில் 2300 ரூபா மாத்திரமே அறவிடப்படுகிறது.

இந்த விடயத்திலும் அரசாங்கம் மோசடி செய்கிறதா என்ற அச்சம் நிலவுகிறது. மக்களின் துன்பத்தை உணராத இந்த அரசாங்கம் கொவிட் விவகாரத்திலும் அவர்களின் உயிருடன் விளையாடுகிறது என்றார்.

No comments:

Post a Comment