(எம்.மனோசித்ரா)
முகப்புத்தகத்தினூடாக பழகிய நண்பியின் இல்லத்தில் 3 இலட்சம் பெறுமதியுடைய தங்க ஆபரணத்தை கொள்ளையிட்ட 24 வயதுடைய யுவதியொருவர் மினுவாங்கொடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சீதுவ பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முகப்புத்தகத்தினூடாக மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பிரிதொரு பெண்ணுடன் நண்பியாகியுள்ளார்.
இந்நிலையில், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணை கடந்த ஜனவரி மாதமும், கடந்த வாரமும் தனது வீட்டுக்கு வருமாறு சீதுவ பிரதேச யுவதி அழைத்துள்ளார்.
அவரின் அழைப்பிற்கேற்ப சீதுவ யுவதியின் வீட்டுக்குச் சென்ற மினுவாங்கொட யுவதி குறித்த வீட்டிலிருந்து கடந்த ஜனவரி மாதம் தங்க கைச்சங்கிலியொன்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதோடு, கடந்த வாரம் 3 இலட்சம் பெறுமதியுடைய தங்க சங்கிலியொன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக சீதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களை உபயோகிக்கும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment