(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றின் காரணமாக முழு உலகும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை தவணைக் கடன் மற்றும் வட்டி தொகை ஆகியவற்றை உரிய நேரத்தில் செலுத்தியுள்ளமையானது, அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்ற வெற்றியாகும். இதன் மூலம் நிதி சந்தை மீதான நம்பிக்கையை அரசாங்கம் மீள கட்டியெழுப்பியுள்ளது. இது நாட்டின் பொருளாதார நிர்வாகத்தின் சாதகமான அம்சமாகும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தொற்று நோயால் உலகின் தனவந்த மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் கூட கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறது.
தடுப்பூசி வழங்கல் உள்ளிட்ட கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டனர். ஆனால் இன்று விரைவாகவும் வெற்றிகரமாகவும் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மக்களை பாதுகாக்கும் பணிகளை அரசாங்கம் தடையின்றி முன்னெடுத்து வருகிறது. அதற்காக தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி நாட்டை முடக்குமாறு வலியுறுத்தியுள்ள அதேவேளை பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்து வருகிறது. நாட்டை முடக்கிய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.
மக்கள் தற்போது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் பொறுப்புடன் செயற்படுகின்றனர். தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்து நாடு வழமைக்கு திரும்ப வேண்டும் என்பதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment