(எம்.மனோசித்ரா)
அரச ஊழியர்கள் சகலரையும் பணிக்கு அழைக்குமாறும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களை முன்னெடுக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அரசாங்கத்திடம் அல்லது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் பரிந்துரைக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்.
தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதற்கான நோக்கம் மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டதா என்ற சந்தேகம் நிலவுகிறது. தடுப்பூசி வழங்கும் பணிகள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் நிகழச்சி நிரலை இலக்காகக் கொண்டதாக இருக்கக் கூடாது என்றும் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், அரச ஊழியர்கள் சகலரும் தற்போது பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, மாகாணங்களுக்கிடையிலான போக்கு வரத்துக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாருடைய தேவைக்காக இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.
உலக சுகாதார ஸ்தாபனம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்பன நாடு கொவிட் பரவல் அபாய நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். ஆரம்பத்தில் இவ்வாறான எச்சரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்தமையே சில மாதங்களுக்கு நாட்டை முடக்க வேண்டிய சூழலை தோற்றுவித்தது. மக்களை கொவிட் அபாயத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். அபாயத்தை உணராமல் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பொறுத்தமற்றது என்றார்.
No comments:
Post a Comment