எரிபொருள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : தொழிற்சங்க உறுப்பினர் சிஐடி யினரால் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

எரிபொருள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து : தொழிற்சங்க உறுப்பினர் சிஐடி யினரால் கைது

ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த, தேசிய ஊழியர் சங்கத்தின் பெற்றொலிய தொழிற்சங்க கிளையின் அழைப்பாளர் ஆனந்த பாலித்த சிஐடி (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த அவர், இன்றையதினம் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இன்னும் 10 - 11 நாட்களுக்கான பெற்றோல், டீசல் கையிருப்பே உள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக, அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கருத்துக்கு வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மறுப்புத் தெரிவித்திருந்ததோடு, அவ்வாறான நிலை காணப்படுமாயின் யாரும் அறிவிக்கும் முன் தான் பொதுமக்களுக்கு அறிவித்திருப்பேன என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் வெளியிட்டுள்ள கருத்து பொய்யானது என்றும், இக்கருத்து காரணமாக, பொதுமக்களிடையே அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே குறித்த நபருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரை நாளையதினம் (22) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, CID மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment