ஜோசப் ஸ்டாலினுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே முழுப்பொறுப்பு : இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகளை வைத்துள்ள மிக விசித்திரமான நாடு இலங்கை - சிறீதரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Friday, August 6, 2021

ஜோசப் ஸ்டாலினுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே முழுப்பொறுப்பு : இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகளை வைத்துள்ள மிக விசித்திரமான நாடு இலங்கை - சிறீதரன் எம்.பி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஆசிரியர் சமூகத்தின் போராட்டம் நியாயமானது, அதற்கு அரசாங்கம் நியாயமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் ஜோசப் ஸ்டாலினை இந்த அரசாங்கம் துரத்திக் கொண்டு திரிகின்றது. அவருக்கு ஏதேனும் ஒன்று நடந்தால் அதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் கீழான கட்டளைகளும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஆசிரியர்களின் போராட்டம் முக்கியமான தளத்தை அடைந்துள்ளது. தங்களுடைய சம்பள பிரச்சினைகள், தாங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலே ஆசிரியர்கள் சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கண்டியில் ஒன்று கூடினார்கள். அவர்களின் போராட்டங்கள் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நெருக்கடியை கையாள சுபோதினி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக ஆசிரியர் சம்பள பிரச்சினைகளை தீர்க்கும் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையையும் கல்வி அமைச்சே உருவாக்கியிருந்தது. ஆகவே சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே ஆசிரியர்கள் சங்கங்கள் கேட்கின்றனர்.

அரசியலுக்காக பயன்படுத்தக் கூடிய முக்கிய துறையாக கல்வித்துறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் கல்வி முறைமையை மாற்றுகின்றனர். அவர்களின் சம்பளங்களை மாற்றுகின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய பின்னடைவாகும்.

ஒரு தங்கப்பவுனுக்கு என்ன விலையோ அதே தொகை ஒரு ஆசிரியரின் அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டின் முன்பள்ளி ஆசிரியர்களை சிவில் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பின் கீழ் வைத்துள்ளனர். இராணுவத்தின் கீழ் முன்பள்ளிகளை வைத்துள்ள மிக விசித்திரமான நாடு இலங்கையே. இதுதான் ஆசியாவின் ஆச்சரியம். அதுமட்டுமல்ல மலையகத்தில் நியமனம் பெற்ற பல ஆசிரியர்கள் தமக்கு வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாவுடன்தான் உள்ளனர். ஏழு வருடங்கள் அவர்களின் சேவை முடிந்துள்ளது.

எனவே ஆசிரியர் சமூகத்தின் போராட்டம் நியாயமானது, அதற்கு அரசாங்கம் நியாயமான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் ஜோசப் ஸ்டாலினை இந்த அரசாங்கம் துரத்திக் கொண்டு திரிகின்றது. அவருக்கு ஏதேனும் ஒன்று நடைபெற்றால் அதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment