எது சிறந்த தடுப்பூசியென ஒன்றை தெரிவு செய்ய முடியாது, அனைத்துமே பலனளிப்பதாக சுகாதார நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் : தொற்றாளர்கள், குணமடைவோர் எண்ணிக்கை அவ்வப்போது மாற்றமடைவதால் சரியாக கூறுவது கடினம் - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி - News View

Breaking

Friday, August 6, 2021

எது சிறந்த தடுப்பூசியென ஒன்றை தெரிவு செய்ய முடியாது, அனைத்துமே பலனளிப்பதாக சுகாதார நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் : தொற்றாளர்கள், குணமடைவோர் எண்ணிக்கை அவ்வப்போது மாற்றமடைவதால் சரியாக கூறுவது கடினம் - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

(ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வசீம்)

தடுப்பூசிகளின் தரம் குறித்து இறுதியாக்கப்பட்ட தரவுகள் என எதுவுமே இல்லை. அனைத்துமே தற்போதும் ஆய்வுகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் எது சிறந்த தடுப்பூசியென ஒன்றை தெரிவு செய்ய முடியாது என சபையில் தெரிவித்த சுகாதரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இலங்கையில் பரவிக் கொண்டுள்ள சகல விதமான கொரோனா வைரஸ்களுக்கும் தற்போது நாம் பயன்படுத்தும் தடுப்பூசிகள் அனைத்துமே பலனளிப்பதாக சுகாதார நிபுணர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

27/ 2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த வாரத்தில் தெற்காசிய வலயத்தில் மீண்டும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு நிலையொன்றே காணப்படுகின்றது. அதேபோல் இலங்கையிலும் வைரஸ் தொற்றாளர் அதிகரிப்பை காட்டுகின்றது.

கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் இரண்டாயிரத்தை தாண்டிய வைரஸ் தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஆனால் எப்போது இன்னொரு வைரஸ் அலை உருவாகும் என கூற முடியாது. தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலமாக மட்டுமே கொரோனா அலை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரையில் 21 ஆயிரத்து 344 கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் 591 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் இந்த காலகட்டத்தில் 1 இலட்சத்து 34 ஆயிரத்து 179 பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் வைரஸ் தொற்றாளர் மற்றும் குணமடையும் நபர்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாற்றம் காண்கிறது என்பதனால் அதனை சரியாக கூறுவது கடினமானது.

ஆனால் கடந்த 10 நாட்களில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெரும் நபர்களின் எண்ணிக்கையில் 140 - 150 என்ற எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இந்த நாட்டிற்குள் பரவிக் கொண்டுள்ள சகல விதமான கொவிட் வைரஸ்களுக்கும் தற்போது நாம் பயன்படுத்தும் சகல தடுப்பூசிகளும் வெற்றிகரமாக செயற்படுகின்றது என்பது சுகாதார நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தடுப்பூசிகளின் தரம் குறித்து இறுதியாக்கப்பட்ட தரவுகள் என எதுவுமே இல்லை. அனைத்துமே தற்போதும் ஆய்வுகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இது சிறந்தது என்ற ஒன்றை தெரிவு செய்ய முடியாது.

ஆனால் இலங்கையில் பரவிக் கொண்டுள்ள சகல விதமான கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கும் நாம் நாட்டில் பயன்படுத்தும் தடுப்பூசிகள் உகந்தது என தெரிவிக்க முடியும். அதுமட்டுமல்ல நாட்டில் தற்போது நாம் தளர்வுகளை கையாண்டுள்ளோம் என்பதற்காக சுகாதார வழிமுறைகளையும் தளர்த்தியுள்ளோம் என அர்த்தப்படாது. தொடர்ந்தும் மக்கள் சுகாதார வழிமுறைகளை கையாண்டு பாதுகாப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment