(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொவிட் அச்சுறுத்தலினால் நாடு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்படைந்துள்ளதால் அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்குவது கடினமாகும். மேலும், இந்த அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில், அரசாங்கத்தை குறை கூறுவதற்கு இது காலம் அல்ல என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது ஆசியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினை பாரிய சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 'சுபீட்சத்துக்கான நோக்கு' வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது கட்சியின் பாராளுமன்ற குழு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியது . இதன்போது, ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்தார்.
எனினும், இதனை எடுத்த எடுப்பில் உடனடியாக செய்ய முடியாது. எமது நாட்டில் மாத்திரமல்ல முழு உலகிலும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுவதால் பொருளாதார ரீதியாக எமது நாடு பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. ஆகவே, அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்குவது கடினமாகும் என்றார்.
No comments:
Post a Comment