வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாலேயே பல்வேறு நாடுகள் இலங்கையை சிவப்பு பட்டியலில் அடையாளப்படுத்தியுள்ளது : பாராளுமன்றம் என்பது சட்டம் இயற்றும் சபை ஆனால் இங்கு அவசரகால சட்டமொன்றை உருவாக்க அரசாங்கம் பின்வாங்குகின்றது - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 7, 2021

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளதாலேயே பல்வேறு நாடுகள் இலங்கையை சிவப்பு பட்டியலில் அடையாளப்படுத்தியுள்ளது : பாராளுமன்றம் என்பது சட்டம் இயற்றும் சபை ஆனால் இங்கு அவசரகால சட்டமொன்றை உருவாக்க அரசாங்கம் பின்வாங்குகின்றது - சுமந்திரன்

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

நாட்டின் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது, அதனாலேயே பல்வேறு சர்வதேச நாடுகள் இலங்கையை சிவப்பு பட்டியலில் அடையாளப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் சுட்டிக்காட்டினார்.

ஒரு சில கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நேரத்தில் இரண்டு மாதங்கள் நாடு முடக்கப்பட்டது, ஆனால் தற்போது நாட்டில் அண்ணளவாக நூறு கொவிட் மரணங்கள் நாளாந்தம் பதிவாகியுள்ள போதிலும் நாடு முடக்கப்படாதுள்ளது எனவும் விமர்சித்தார்.

குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், குறிப்பாக மத்திய கிழக்கின் பல நாடுகள் தமது நாட்டுக்குள் வருவதற்கு இலங்கை பிரஜைகளை அனுமதிக்காத நிலையில், மத்திய கிழக்கு நாடுகளினூடாக வேறு நாடுகளுக்கு பயணிக்கவும் அனுமதிக்காத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று நாம் கொவிட் நான்காம் அலையொன்றுக்கு முகங்கொடுக்கும் நிலையொன்று ஏற்பட்டுள்ளது. சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் இருந்து இதனை எச்சரித்து வந்ததுடன், நாடு மோசமான கொவிட் வைரஸ் பரவலுக்கு முகங்கொடுத்தால் அதற்கு தாம் பொறுப்பில்லை எனவும் கூறியுள்ளனர். அவர்களின் நிலைப்பாடு நியாயமானதே, ஏனென்றால் அவர்கள் கூறும் காரணிகளை தீர்மானம் எடுக்கும் தரப்பு செவிமடுப்பதில்லை என்பதையே அவர்கள் கூறுகின்றனர்.

இராணுவ தளபதியின் தலைமையின் கொவிட் செயலணியொன்று இயங்குகின்றது. ஆனால் அவர்கள் கொவிட் நிலைமைகளை கையாள்வதில் பலவீனம் கண்டுள்ளனர். இலங்கையின் வைத்தியசாலைகளின் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டுள்ளன.

இப்போது பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள் முறையாக சட்ட ரீதியாக பின்பற்றப்படுவதில்லை என்பதை நாம் தொடச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளோம். சட்ட மூலம் ஒன்றினை முன்வைத்துள்ளோம், ஆனால் அதனை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை. தனிநபர் சட்டமாகவும் நான் சபையில் இதனை முன்வைத்து, சுகாதார அமைச்சிடமும் வழங்கினேன்.ஆனால் இதற்கும் எந்த பதிலும் இல்லை.

தற்போது கையாளும் வழிமுறைகளை சட்ட ரீதியாக கையாள வேண்டும். எனினும் இப்போது கையாளும் பயணத்தடை கூட சட்ட அங்கீகாரம் இல்லாதது, இதனையே நாம் எத்தனை தடவைகள் கூறுவது. பாராளுமன்றம் என்பது சட்டம் இயற்றும் சபை, ஆனால் இங்கு அவசரகால சட்டமொன்று உருவாக்க ஏன் அரசாங்கம் பின்வாங்குகின்றது.

அப்படியென்றால் ஏன் நாம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம், அரசாங்கம் தமது அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இதற்கு தீர்வு வழங்க நினைப்பது பொருத்தமானது அல்ல. அரசாங்கத்திடம் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுவதில்லை. கொவிட் வைரஸை கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது, அதனை மறைக்க அடக்குமுறையை அரசாங்கம் கையாண்டு வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment