எங்களுடைய விருப்பப்படி பெற்றுக் கொள்ள இது ஒன்றும் துணிமணியோ, உணவு வகையோ அல்ல : தயக்கம் காட்டாமல் கிடைக்கும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள வேண்டும் - தேசிய ஐக்கிய முன்னணி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

எங்களுடைய விருப்பப்படி பெற்றுக் கொள்ள இது ஒன்றும் துணிமணியோ, உணவு வகையோ அல்ல : தயக்கம் காட்டாமல் கிடைக்கும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள வேண்டும் - தேசிய ஐக்கிய முன்னணி

அரசாங்கம் பெரும் பொருளாதார சிரமத்துக்கு மத்தியில் கொவிட் தடுப்பூசி விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி அதைப் பெற்று வருகின்றது. அதனால் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்தும் தயக்கம் காட்டாமல், கிடைக்கும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.

கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் அவசியம் குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் கொவிட்-19 நோய் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றமை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இது மிகவும் கவலை அளிக்கும் ஒரு விடயமாக மாறி உள்ளது.

நமக்கு தெரிந்த அல்லது நமது உறவினர் அல்லது நண்பர் அல்லது நமது அயலவர், உடன் பிறப்புக்களில் ஒருவர் என இப்படி யாராவது ஒருவரை நாம் தினசரி இழந்து வருகின்றோம். பொழுது விடிந்தாலே ஒன்றில் நோய் பற்றிய செய்தி அல்லது மரணங்கள் பற்றிய தகவல்கள்தான் எம்மை வந்து சேருகின்றன.

இந்த மரணங்களுக்கு நடுவே முஸ்லிம்களின் மரணம் குறித்து இப்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இனவாத வெறி மூளையில் ஏறி அதில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் சில ஊடகங்களும் இன்னும் சிலரும் இந்த நோய்ப் பரவல் மரணங்களில் கூட இனவாதம் பேசும் ஒரு கசப்பான கால கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

இவர்களின் இனவாதப் பேச்சுக்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளா விட்டாலும் கூட, அவர்கள் ஏன் இப்படிப் பேசுகின்றார்கள் என்று சிந்திக்க வேண்டிய ஒரு தேவைப்பாடும் நமக்கு உள்ளது.

சுகாதாரத் துறையினரின் உத்தியோகப்பூர்வ தகவல்களின் படி கொவிட்-19 காரணமாக இலங்கையில் இதுவரை மரணம் அடைந்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதைத் தாண்டியவர்கள். தினசரி வெளியிடப்படும் மரணங்களின் எண்ணிக்கையிலும் பெரும்பாலானவர்கள் இதே வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதில் சுமார் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் இதுவரை எந்தவிதமான தடுப்பூசிகளும் எடுத்துக் கொள்ளாதவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இப்போது தர்க்க ரீதியாக ஒரு விடயத்தை யோசித்துப் பாருங்கள், இந்த மரணங்களில் முஸ்லிம்கள் அதிகம் இருக்கின்றார்கள் என்றால் முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அதிலும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்ற முடிவுக்குத்தானே நாம் வர வேண்டி உள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும்.

தடுப்பூசிகளில் ஒரு குறிப்பிட்ட வகையைத்தான் எடுத்துக் கொள்வோம் என்று சிலர் அடம்பிடிக்கின்றனர். எங்களுடைய விருப்பப்படி பெற்றுக் கொள்ள இது ஒன்றும் துணிமணியோ அல்லது உணவு வகையோ அல்ல.

அரசாங்கம் பெரும் பொருளாதார சிரமத்துக்கு மத்தியில் தடுப்பூசி விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி அதைப் பெற்று வருகின்றது. சில நாடுகள் இலங்கை மக்கள் மீது அன்பு காட்டி அதை நன்கொடையாகவும் வழங்கி வருகின்றன. இதில் எந்தவொரு தடுப்பூசியும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இலங்கையில் பாவிக்கப்படும் எல்லா வகையான தடுப்பூசிகளும் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை. உள்ளுர் நிபுணர்களும் இதற்கு தேவையான அங்கீகாரத்தை வழங்கி உள்ளனர். மார்க்க ரீதியாக இதைப்பற்றி நாம் கவலைபடத் தேவையில்லை. பெரும்பாலான உலமாக்கள் இது சரி என்பதை ஏற்றுள்ளனர். அதனால் மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு கொவிட் தடுப்பூசியை ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பூசி என்பது வைரஸ் தொற்றாது அல்லது அதனால் மரணம் ஏற்படாது என்பதற்கான ஒரு அனுமதிப்பத்திரம் அல்ல. ஆனால் வைரஸ் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து ஒரு பாதுகாப்பை வழங்கக் கூடிய கேடயம் மட்டுமே.

இப்போது நடந்து கொண்டிருப்பது வைரஸ் உடனான ஒரு யுத்தம். இந்த யுத்தத்தில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள உடலில் ஒரு கேடயத்தை அணிந்து கொள்ள ஏன் தயங்க வேண்டும்? அதற்கு ஏன் அஞ்ச வேண்டும்?

முதியவர்கள் என்பது ஒரு வீட்டின், ஒரு சமூகத்தின் மற்றும் ஒரு தேசத்தின் முதுசங்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது. இந்த முடக்க நிலையில் கூட முதியவர்களுக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி போடும் திட்டத்தை நமது இராணுவம் மிகவும் அர்ப்பணிப்போடு செய்து வருகின்றது. அந்த சேவைகளை எல்லோரும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment