வரத்தமானி அறிவிப்பை இரகசியமான முறையில் இரத்து செய்ய முயற்சி : தேசிய பாதுகாப்பைக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களின் சுகாதார பாதுகாப்பை இல்லாதொழித்துள்ளது - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

வரத்தமானி அறிவிப்பை இரகசியமான முறையில் இரத்து செய்ய முயற்சி : தேசிய பாதுகாப்பைக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களின் சுகாதார பாதுகாப்பை இல்லாதொழித்துள்ளது - மனுஷ நாணயக்கார

(இராஜதுரை ஹஷான்)

இரசாயன உரம் மற்றும் இரசாயன கிருமி நாசினி பாவனை தடை தொடர்பில் வெளியிடப்பட்ட வரத்தமானி அறிவிப்பை இரகசியமான முறையில் இரத்து செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. இரசாயன உரம் தொடர்பில் அரசாங்கம் தூரநோக்கற்ற வகையில் எடுத்த தீர்மானத்தினால் விவசாயிகளே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இரசாயன பூச்சிக் கொல்லியை இறக்குமதி செய்யும் 29 நிறுவனங்கள் உள்ள நிலையில் ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் 10 பில்லியன் பெறுமதியான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கவுள்ளமை எவரது நோக்கத்திற்காக, தேசிய பாதுகாப்பைக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று மக்களின் சுகாதார பாதுகாப்பை இல்லாதொழித்துள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலையில் மக்கள் போராடும் வேளையில் உணவு பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுகிறது.

உரம் தொடர்பில் தூரநோக்கு சிந்தனைகள் ஏதும் இல்லாமல் எடுத்த தன்னிச்சையான தீர்மானத்தினால் தற்போது உணவு பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. மொனராகலை, அம்பாறை, வட மத்திய மாகாண சோள பயிர்ச் செய்கை விவசாயிகள் பெரும்போக விளைச்சலை மேற்கொள்வது தொடர்பில் சந்தேகமான நிலையில் உள்ளார்கள். ஏனைய பயிர்ச் செய்கையாளர்கள் விவசாயம் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளார்கள்.

சோள பயிரச் செய்கையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விலங்குகளுக்கு தேவையான உணவும் சோளத்தின் ஊடாக தயாரிக்கப்படுகின்றன. எதிர்வரும் காலப்பகுதியில் விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும். இதனால் விலங்கு வேளாண்மை சார் உற்பத்திகளும் பாதிக்கப்படும்.

விவசாயத்துறை ஊடாக வருடத்திற்கு 2.5 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெறும். அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தினால் இந்த வருமானமும் இல்லாமல் போகும். அரசாங்கம் கடந்த வாரம் பாக்கிஸ்தானிலிருந்து அரிசி இறக்குமதி செய்தது.

இரசாயன உரம் பாவனையினால் உடலாரோக்கியத்திற்கு பாதிப்பு என குறிப்பிடும் அரசாங்கம் பாக்கிஸ்தான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இரசாயன உரத்தில் உற்பத்தி செய்யப்பட்டதா அல்லது சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதை ஆராய்ந்ததா, மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துரைத்தே அரசாங்கம இன்று பலவீனமடைந்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் இல்லாமல் விவசாயிகள் சிறு போகத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலை பெரும் போகத்திலும் தொடர்ந்தால் பாரிய உணவு பற்றாக்குறை நாட்டில் நிலவும். இரசாயன உரம் இனி இறக்குமதி செய்ய மாட்டோம் என ஜனாதிபதியும், அமைச்சர்களும் குறிப்பிட்டார்கள்.

இரசாயன உரம் இறக்குமதி செய்வதற்கான யோசனை கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 12 பில்லியன் கிருமி நாசினிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதில் 10 பில்லியன் பெறுமதியிலான கிருமி நாசினிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. 29 நிறுவனங்கள் உள்ள போது ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் எதனடிப்படையில் அனுமதி வழங்கப்படவுள்ளது.

இரசாயன உரம் மற்றும் பாவனையை இல்லாதொழிக்கவுள்ள முதல் நாடு இலங்கை என ஜனாதிபதி குறிப்பிட்டார். இரசாயன உர பாவனை தடை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானியை இரகசியமான முறையில் இரத்து செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் செயற்பாட்டால் விவசாயிகளே இறுதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

No comments:

Post a Comment