ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது - News View

Breaking

Sunday, August 8, 2021

ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது என்றும், அதை மீட்பதற்கு உரிய நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. 

அது மீட்கப்படும் வரை அவர் வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளது காங்கிரஸ். 

இந்த முடக்கம் காரணமாக ராகுல் காந்தியால் புதிதாக எதுவும் ட்வீட் செய்ய முடியாது. ஆனால், அவரது பழைய ட்வீட்களைப் பார்க்க முடியும். 

டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு சிறுமியின் குடும்பத்தை சந்தித்து சமீபத்தில் ஆறுதல் கூறியிருந்தார் ராகுல் காந்தி. அது தொடர்பான படம் ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் அவர். 

பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற சட்டத்தை மீறும் வகையில் இந்த படம் இருப்பதாக குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் குற்றம் சாட்டியது. 

எனவே இந்த ட்வீட் மீது நடவடிக்கை எடுக்கும்படி ட்விட்டரையும், டெல்லி போலீசையும் கேட்டுக் கொண்டது ஆணையம். 

இந்நிலையில் அந்த ட்வீட்டை நீக்கியது ட்விட்டர். இந்த பின்னணியில்தான் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad