ஸ்டாலினின் அறிவிப்பை நாமல் வரவேற்பு : யாழ் அகதிகளை மீள்குடியேற்றுமாறு மனோ பதில் - News View

Breaking

Sunday, August 29, 2021

ஸ்டாலினின் அறிவிப்பை நாமல் வரவேற்பு : யாழ் அகதிகளை மீள்குடியேற்றுமாறு மனோ பதில்

தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினின் இலங்கை அகதிகள் தொடர்பான அறிவிப்பை வரவேற்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது Twitter கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தமிழ் நாட்டுக்கு தப்பியோடிய அகதிகளை மீள வரவேற்றது. தரவுகளின் அடிப்படையில், UNHRC யின் உதவியுடன் 3,567 குடும்பங்கள் இலங்கைக்குத் திரும்பியுள்ளதாக, நாமல் ராஜபக்ஷ அதில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு திரும்பும் இந்தியாவிலுள்ள அகதிகளுக்கு அவசியமான வீடு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு திரும்பும் அனைத்து அகதிகளும் தங்கள் தாயகத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, தங்கள் வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதனை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் உறுதி செய்வார்கள் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பதிவை மேற்கோள் காட்டி தனது Twitter கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள மனோ கணேசன் எம்.பி.,

"தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், இன்றும் யாழில், பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுங்கள். வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு போக விடுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment