கைது செய்யப்பட்ட தொழிற்சங்க ஊழியர் ஆனந்த பாலித்தவுக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

கைது செய்யப்பட்ட தொழிற்சங்க ஊழியர் ஆனந்த பாலித்தவுக்கு பிணை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியிட்ட கருத்து தொடர்பில் கைதான, பெற்றோலிய தேசிய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (22) பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரை தலா ரூ. 10 இலட்சம் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த, தேசிய ஊழியர் சங்கத்தின் பெற்றொலிய தொழிற்சங்க கிளையின் அழைப்பாளர் ஆனந்த பாலித்த நேற்றையதினம் (21) சிஐடி (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இன்னும் 10 - 11 நாட்களுக்கான பெற்றோல், டீசல் கையிருப்பே உள்ளதாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து பொய்யானது என்றும், இக்கருத்து காரணமாக, பொதுமக்களிடையே அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே குறித்த நபருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் அரசாங்கத்தையும் நாட்டு மக்களையும் வலு சக்தி அமைச்சரையும் கஷ்டத்தில் தள்ளி விடுவதற்காக இவ்வாறு தெரிவிக்கவில்லை என்றும், உண்மையான எரிபொருள் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்து, கடின நிலையில் உள்ள மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காகவே அதனைத் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

ஆயினும் பிழையான வழிமுறைகளைக் கையாண்டு எம்மை அடக்கி ஒடுக்கப் பார்க்கிறார்கள். ஆயினும் நியாயமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக, பிணையில் விடுவிக்கப்பட்ட ஆனந்த பாலித்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

No comments:

Post a Comment