இலங்கைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கிய பாகிஸ்தான் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

இலங்கைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கிய பாகிஸ்தான்

(அஷ்ரப் ’ஏ சமத்)

இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் வழங்கி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டக் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹ்மத் ஆகியோர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (21) சந்தித்து, பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் 75 வென்டிலேட்டர்கள் மற்றும் 150 சி-பெப் (CPAP) சுவாச உதவி இயந்திரங்களை இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக வழங்கி வைத்தனர்.

இது கொவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் இலங்கை மக்களுக்கான, பாகிஸ்தானிய மக்களின் ஆதரவின் வெளிப்பாடாகும்.

இந்நிகழ்வில், அமைதி மற்றும் நிலையான அபிவிருத்திற்கான பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய பாகிஸ்தான் அரசாங்கத்தின் பார்வையை உயர் ஸ்தானிகர் விளக்கப்படுத்தியதோடு, பிராந்திய நாடுகளுடன் குறிப்பாக நட்பு நாடான இலங்கையுடன் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கும் என்றும் உறுதியளித்தார். சார்க் அமைப்பின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பாகிஸ்தானின் தீர்மானத்திற்கு இது ஒரு சிறந்த சான்றாகும். கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான பொதுவான போராட்டத்தில் பிராந்திய அளவிலான முயற்சிகளை மேம்படுத்துவதற்காக பாகிஸ்தானின் “சார்க் கொவிட்-19 அவசர உதவி” இன் ஒரு பகுதியாக இம்மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கு முன்பும், உயர் ஸ்தானிகர் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து போராட, இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு (SPC) இலங்கை ரூபா 8 மில்லியன் பெறுமதியான காசோலையை இலங்கை ஜனாதிபதியிடம் 2021 ஜூன் 19 அன்று கங்காராமய விகாரையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 இன் 4ஆவது அலை நாட்டில் உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், இந்த உதவிக்காக பாகிஸ்தான் அரசுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

ஹுனுபிட்டிய கங்காரமய விகாரை விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி நாயக தேரர் மற்றும் அரசியல் ஆர்வலர் அசேல விக்ரமசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment