சுமார் 45 இலட்சம் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிப்பு : நாட்டை தொடர்ந்து முடக்கினால் பொருட்களின் விலை அதிகரிக்க கூடும் - அஜித் நிவார்ட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 28, 2021

சுமார் 45 இலட்சம் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிப்பு : நாட்டை தொடர்ந்து முடக்கினால் பொருட்களின் விலை அதிகரிக்க கூடும் - அஜித் நிவார்ட் கப்ரால்

இராஜதுரை ஹஷான்

நாட்டை முடக்கியுள்ளதால் சுமார் 45 இலட்சம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே நாட்டை தொடர்ந்தும் முடக்கினால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இது தொடர்பில் அவர் செய்துள்ள பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொவிட் தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு நாட்டை முடக்கியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டை முடக்குவதால் நாளொன்றுக்கு சுமார் 15 பில்லியன் அரச வருமானம் இழக்கப்படுகிறது.

ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எதிர்தரப்பினர் முதலில் தெளிவு பெற வேண்டும்.

நாட்டை தொடர்ந்து முடக்கினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். தற்போதும் பெரும்பாலான பொருட்களின் விலைகள் சடுதியான உயர்வடைந்துள்ளன.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 45 இலட்சம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment