ரிஷாட் பதியூதீன் எம்.பியின் மனைவி உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை, மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கடந்த ஜூலை 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகிய நால்வரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (09) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு ஓகஸ்ட் 23ஆம் திகதி வரை மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்பொது அவர்களால் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீன் எம்.பி.யின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த 16 வயது ஹிஷாலினி ஜூட் குமார் எனும் சிறுமி எரிகாயங்களுடன் மரணித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஆட்களை விற்பனை செய்தல், கொடுமைப்படுத்தல்/ சித்திரவதை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சிஹாப்தீன் ஆயிஷா (46), மொஹமட் சிஹாப்தீன் (70), சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம் (64) ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கு முன்னர் குறித்த வீட்டில் பணிபுரிந்த 22 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மைத்துனரான மதவாச்சியைச் சேர்ந்த சிஹாப்தீன் இஸ்முதீன் (44) என்பவரும் கடந்த ஜூலை 23ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment