கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேருக்கு கொரோனா, ஐவர் மரணம் - News View

Breaking

Friday, August 6, 2021

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேருக்கு கொரோனா, ஐவர் மரணம்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் வியாழக்கிழமை (05) 423 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்படுவதால், பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுள்ளார்.

இலங்கையில் மேல் மாகாணம் உட்பட பல மாவட்டங்களில் டெல்டா வகை கொவிட்-19 பரவிக் கொண்டிருப்பதனால் எமது பகுதியிலும் இதன் தாக்கம் ஏற்படும். மேலும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

தற்போது நாட்டில் அரச தனியார் நிறுவனங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கொவிட்-19 தடுப்பு மருந்தின் முதலாவது, இரண்டாவது டோஸ்களை போட்டுக் கொள்வது அவசியமாகும்.

அண்மையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதைக் கருத்துக் கொண்டு, மக்கள் தமது பாதுகாப்பில் கவனயீனமாக இருப்பதால் எதிர்வரும் காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 5194 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 8466 பேரும், அம்பாறை பிரிவில் 3618 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 4183 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 21 ஆயிரத்தி 461 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் 390 மரணங்கள் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad