பெரும் சமராக அமையப் போகும் 2024 ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் கூட்டணி : ஆட்சியை கைப்பற்ற 75 திட்டங்களை வகுத்துள்ள ரணில் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 1, 2021

பெரும் சமராக அமையப் போகும் 2024 ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் கூட்டணி : ஆட்சியை கைப்பற்ற 75 திட்டங்களை வகுத்துள்ள ரணில்

(லியோ நிரோஷ தர்ஷன்)

2024 ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றும் வகையில் 75 திட்டங்களை ரணில் விக்கிரமசிங்க வகுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 75 ஆவது சம்மேளனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான உறுதியை அனைத்து உறுப்பினர்களும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

மேலும் அன்றைய தினத்திலிருந்து ஆட்சியை கைப்பற்றும் திட்டங்களை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்து ஆரம்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்த வலுவான கூட்டணி குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கரு ஜயசூரிய, மங்கள சமரவீர மற்றும் குமார் வெல்கம ஆகியோர் தற்போது பல்வேறு மட்டத்தில் செயற்பட்டு வருகின்றனர்.

மறுபுறம் சம்பிக்க ரணவக்கவும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் இருந்தாலும் தனது 43 ஆவது செயலணி என்ற அமைப்பு ஊடாக மாற்று அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

இறுதியில் இவர்களையும் கூட்டணிக்குள் உள்வாங்குதற்கு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய கூட்டணிக்கான செயற்பாடுகளை ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன் மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் தேசிய அரசியலில் 2024 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ஒரு பெரும் சமராகவே அமையப் போகின்றது. இந்த தேர்தலை மையப்படுத்தி பிரதான கட்சிகள் அனைத்தும் பல வியூகங்களை வகுத்து வருகின்றன.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியை மீண்டும் பலப்படுத்தும் நடவடிக்கைளில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் கூட்டணிக்குள் உள்ள பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அண்மைகால வெளிப்படுத்தல்கள், தொகுதி அமைப்பாளர் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகள் அனைத்துமே அடுத்த தேர்தல்களில் மாற்று அரசியல் தீர்மானத்திற்கான வெளிப்பாடுகளையே கொண்டுள்ளன.

மறுப்புறம் 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்த அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன. இது ஆளும் கட்சிக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் ஐக்கிய தேசிய கட்சி அடுத்த ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. பல தரப்புடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment