மட்டக்களப்பு மாவட்டத்தில் 201 பேர் பலி, கடந்த 24 மணி நேரத்தில் 209 பேருக்கு கொரோனா : வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்கிறார் வைத்தியர் மயூரன் - News View

Breaking

Friday, August 27, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் 201 பேர் பலி, கடந்த 24 மணி நேரத்தில் 209 பேருக்கு கொரோனா : வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்கிறார் வைத்தியர் மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 2 உட்பட 4 பேரும், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வவுணதீவு, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 4 பேரும் இவ்வாறு கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பில் 72 பேரும், களுவாஞ்சிக்குடியில் 53 பேரும், செங்கலடியில் 25 பேரும், வெல்லாவெளியில் 22 பேருமாக மாவட்டத்திலுள்ள ஏனைய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் உட்பட 209 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தொற்றினால் 20 வயது தொடக்கம் 40 வயது வரையில் 9 பேரும், 40 வயது தொடக்கம் 50 வயது வரை 16 பேரும், 50 தொடக்கம் 60 வயது வரையில் 39 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 137 பேரும் உயிரிழந்துள்ளதுடன் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 86 வீதமானோர் உயிரிழந்துள்ள நிலையில் 55 வீதமான ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் 2400 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இருந்த போதும் கடந்த வாரத்தில் மட்டும் 2093 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

சராசரியாக ஒரு நாளில் 300 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளங்காணப்படுவதுடன் 5 க்கும் மேற்பட்ட மரணங்களும் இடம்பெற்று வருகின்றன.

தற்போது 3456 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவர்களில் 2600 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இந்த கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றால் மக்களாகிய நீங்கள் சமூக பொறுப்புடன் நடந்தால் மாத்திரமே இதனை கட்டுப்படுத்த முடியம்.

மேலும் தற்போது ஊரடங்கு அமுலிலுள்ள வேளையில் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment