ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறின அமெரிக்க படைகள் : 20 ஆண்டு கால யுத்தம், அறிய வேண்டிய 25 முக்கிய தகவல்கள் - News View

Breaking

Tuesday, August 31, 2021

ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறின அமெரிக்க படைகள் : 20 ஆண்டு கால யுத்தம், அறிய வேண்டிய 25 முக்கிய தகவல்கள்

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ளன. ஆகஸ்ட் 31 க்குள் வெளியேற்ற நடவடிக்கைளை முடிக்க வேண்டும் என்று அமெரிக்கா வைத்திருந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

சுமார் 3000 பேர் கொல்லப்பட்ட, செப்டம்பர் 11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் 2001 ஆம் ஆண்டு நடந்த பிறகு அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தலிபான்கள், தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக அமெரிக்கா அந்த நாட்டின் மீது படையெடுத்தது.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியின் கீழ் இருந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் விலகிய நிலையில் தற்போது மீண்டும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை மீளப் பெறுவதை அமெரிக்கா திங்கட்கிழமை நிறைவு செய்தது. 

காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை பிற்பகல் 3:29 மணியளவில் இறுதி போயிங் சி -17 குளோப்மாஸ்டர் விமானம் அமெரிக்க நோக்கி புறப்பட்டபோது.
பல்லாயிரம் உயிரிழப்புகளையும் பல லட்சம் கோடி செலவையும் ஏற்படுத்திய இந்தப் போர் குறித்த 25 முக்கிய தகவல்கள்.

1. ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் சுமார் ஒரு லட்சத்து 23 ஆயிரம் பொதுமக்களை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி உள்ளதாக அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு தலைமை வகிக்கும் ஜெனரல் ஃபிராங்க் மெக்கன்சி தெரிவித்துள்ளார். இவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே அமெரிக்க குடிமக்கள்.

2. இவர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளாலும் பல்லாயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் அந்த நாடுகளுக்கு ஆக பணியாற்றி ஆப்கானியர்கள் அனைவருக்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

3. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க ராணுவ வீரரின் பெயர் கிறிஸ் டோனஹ்யூ. இவர் அமெரிக்காவின் 82 ஆவது ஏர்போர்ன் படைப் பிரிவின் காமாண்டிங் ஜெனரல் பதவியில் உள்ளார். அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான சி-17 சரக்கு விமானம் ஒன்றின் மூலம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அவர் ஆப்கனில் இருந்து கிளம்பினார்.

4. அமெரிக்க வரலாற்றிலேயே சண்டையில் ஈடுபடாமல் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட வெளியேற்றும் நடவடிக்கைகளில் இதுதான் மிகப் பெரியது என்று ஜெனரல் ஃபிராங்க் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.

5. அமெரிக்காவின் கடைசி விமானங்கள் ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்பு காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டாடும் வகையிலான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நகர தெருக்களிலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

6. அமெரிக்க படைகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் காபூலில் இருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானுடன் வெளியுறவு தொடர்பை மட்டுமே இனி அமெரிக்கா கொண்டிருக்கும்.

7. ஆனால் அந்த அலுவலகம் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருக்காது கத்தாரில் உள்ள தோகாவில் ஆப்கானிஸ்தான் உடனான வெளியுறவு தொடர்பாடல்களை மேற்கொள்ளும் அலுவலகம் அமெரிக்காவிலிருந்து நிர்மாணிக்கப்படும் என்று அந்நாட்டின் வெளியுறவு செயலர் ஆண்டனி ப்லிங்கன் தெரிவித்துள்ளார்.

8. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படை எடுத்த பின்பு இதுவரை அமெரிக்காவுக்கு நான்கு பேர் ஜனாதிபதியாக இருந்துள்ளனர்.

9. இந்த நான்கு ஜனாதிபதிகளில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள். பாரக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். ஜோ பைடன் பாரக் ஒபாமாவின் பதவிக் காலத்தில் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

10. செப்டம்பர் 9/11 தாக்குதலுக்குப் பிறகு அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு தமது படைகளை அனுப்பினார்.

11. அவருக்கு பிறகு ஜனாதிபதியாக வந்த பராக் ஒபாமா இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. இவரது ஆட்சியில் அதிகபட்சமாக சுமார் 1,40,000 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்தனர். ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது ஜனாதிபதி பதவியில் இருந்த வரும் ஒபாமாதான்.

12. ஒபாமாவுக்கு பிறகு ஒருமுறை மட்டுமே அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் திரும்பி வருவதற்கு வழிவகை செய்யப்படும் என்று கூறியதுடன் தலிபான்கள் உடன் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் ஒன்றையும் ஏற்படுத்தினார்.

13. டிரம்ப் பதவி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தற்போது அவருக்கு பிறகு ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் பதவிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என்றும் அமெரிக்கர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார் பைடன்.

14. செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு தலைமை வகித்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு மற்றும் அவரது அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு வலிமை குன்றச் செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றின் மூலம் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்த நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி பைடன் கூறியிருந்தார்.

15. வேறு ஒரு நாட்டின் உள்நாட்டுப் போரில் இனிமேல் அமெரிக்க துருப்புகளை பங்கேற்க வைக்க மாட்டோம் என்றும் அவர் கூறியிருந்தார்.

16. 2011 ஆம் ஆண்டு மே 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் ஒசாமா பின் லேடன் அமெரிக்காவின் திடீர் ராணுவ நடவடிக்கை ஒன்றில் கொல்லப்பட்டார். தங்கள் மண்ணில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அப்போது கண்டனம் தெரிவித்தது.

17. இந்த ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலில் இருபதாவது ஆண்டை நிறைவு செய்யும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படும் என்று ஜோ பைடன் அறிவித்த பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்ற தங்களது முயற்சிகளை மும்முரம் ஆக்கினார்.

18. அமெரிக்க ராணுவத்தினரால் பயிற்சி அளிக்கப்பட்ட ஆஃப்கன் ராணுவத்தினர் சுமார் 3 லட்சம் பேரில் கையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல இடங்களில் ராணுவத்தின் எதிர்ப்பே இல்லாமல் தலிபான்கள் நகரங்களை கைப்பற்றினர்.

19. ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை 3 லட்சம் என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டாலும் அந்த எண்ணிக்கை இன்னும் குறைவு என்று சில கணக்கீடுகள் காட்டுகின்றன.

20. 2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 822 பில்லியன் அமெரிக்க டொலரை ஆப்கானிஸ்தான் போருக்காக அமெரிக்க அரசு செலவிட்டுள்ளதாக அலுவல்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா பாகிஸ்தானில் செய்த செலவுகள் இதில் அடங்காது.

21. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகியவை முறையே 30 பில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 19 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகியவற்றை செலவழித்துள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்த இரண்டு நாடுகளின் ராணுவத்தினர்தான் ஆப்கானிஸ்தானில் பெருமளவு இருந்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 ஆம் ஆண்டே அமெரிக்காவுக்கு ஆதரவான நேட்டோ படைகள் வெளியேறியிருந்தன.

22. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் மனித உரிமைகள் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் உள்ளிட்டவை குறித்த தெளிவற்ற சூழ்நிலையே தற்போது விளங்குகிறது.

23. ஆப்கானிஸ்தான் பொருளாதாரமும் மிகவும் வலுவற்ற நிலையில் தற்போது உள்ளது தலிபான்களின் புதிய ஆட்சி அதை எவ்வாறு சீர் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

24. தலிபான்கள் ஆகஸ்ட் மத்தியில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின் உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியன அந்த நாட்டுக்கான நிதி மற்றும் கடன்களை உடனடியாக நிறுத்தி வைத்தன.

25. அமெரிக்கா படையெடுத்த 20 ஆண்டுகள் அதற்கு முந்தைய 20 ஆண்டுகள் என ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 40 ஆண்டுகளாக ஒரு போர் நிலையிலேயே உள்ளது. அங்குள்ள 3.8 கோடி ஆப்கானியர்கள் வாழ்க்கையிலும் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஆனால் அந்த சகாப்தம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்.

அமெரிக்காவின் போர் முடிந்து விட்டது. ஆனால் ஆப்கன் மக்களின் போர் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment