உலகின் மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தை என்று நம்பப்படும் குழந்தை சிங்கபூர் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளது.
குறைப்பிரசவத்தில் பிறந்தபோது இக்குழந்தையின் எடை 212 கிராம் மட்டுமே என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
24 வாரங்கள் ஆறு நாட்கள் கருவாக இருந்தபோது, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்த இக்குழந்தை ஒரு பெரிய ஆப்பிள் பழத்தின் எடையை கொண்டிருந்தது. அக்குழந்தைக்கு க்வெக் யூ சுவான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு 245 கிராம் எடையில் அமெரிக்காவில் பிறந்த குழந்தைதான் உலகின் மிகச் சிறிய குழந்தையாக கருதப்பட்டது.
உயிருக்கு போராடி வந்த அக்குழந்தை சிங்கப்பூரிலுள்ள தேசிய பல்கலைக்கழக வைத்தியசாலையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தது.
சில மணி நேரங்கள் மட்டுமே யூ சுவான் என்ற பெண் குழந்தை உயிருடன் இருக்கும் என்றும், பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அக்குழந்தையின் பெற்றோரிடம் வைத்தியர்கள் அப்போது தெரிவித்தனர்.
ஆனால் 13 மாதங்களுக்கு பிறகு, 6.3 கிலோ எடையுடன் நல்ல உடல் நலத்துடன் அக்குழந்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ப்ரி-எக்லம்ப்சியா என்ற கர்ப்பகால சிக்கல் ஏற்பட்டதால், கொடுக்கப்பட்ட திகதிக்கு மூன்று மாதத்திற்கு முன்னதாகவே யூ சுவானின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
ப்ரி-எக்லம்ப்சியா என்பது உயர் இரத்த அழுத்த நிலையை சார்ந்த கர்ப்பகால சிக்கலாகும். இதனால் தாய் சேய் இருவருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment