காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இரு குண்டு வெடிப்புகள் : 13 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இரு குண்டு வெடிப்புகள் : 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வெடிப்புச் சம்பவங்கள் காபூலில் உள்ள கமிட் ஹர்சாய் விமான நிலையத்திற்கு வெளியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்களை கொண்டு செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காபூல் விமான நிலையத்தின் 'அப்பே' நுழைவாயிலுக்கு அருகில் ஒரு சில துப்பாக்கி வேட்டுகளைத் தொடர்ந்து, இரண்டு குண்டு வெடிப்புகள் அடுத்தடுத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க இராணுவத்தினரை இலக்கு வைத்து இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமெனவும், இது ஒரு தற்கொலைத் தாக்குதல் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பி வாயில் பகுதியில் ஒரு தாக்குதலும், அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள பேரன் விடுதி அருகே மற்றொரு தாக்குதலும் நடந்துள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி வாஷிங்டனில் தற்போது நடத்தி வரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக ஆப்கானியர்கள் விமான நிலையத்தின் வாசலில் மக்கள் கூடியிருந்த நிலையில் குறித்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்தபோது நூற்றுக்கணக்கான மக்கள் விமான நிலைய வாயில் பகுதிக்கு எதிரே நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை வாயில் பகுதியில் இருந்த தலிபான்கள் உள்ளே செல்லுமாறு வற்புறுத்தி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி இருந்ததாகவும் தெரிய வருகிறது.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் இதுவொரு தற்கொலைத் தாக்குதலாக இருக்குமென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூலில் இன்று மாலையில் நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என எச்சரிக்கிறார், அந்நாட்டில் இருக்கும் பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.

அங்கு பலியானவர்களின் சடலங்கள் இடம்பெற்ற காணொளியை பார்க்கும்போது, அதிகாரிகள் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என தெரிய வருகிறது.

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற குண்டு வெடிப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் தற்போது அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, தலிபான்கள் காபூல் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆப்கான் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இதுவரை 80,000 பேர் ஆப்கானை விட்டு வெளியேறியுள்ளதாகவும், மேல் பல ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு இடம்பெறலாம் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment