நாடு முடக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் விஞ்ஞானபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் : அரசாங்கம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினால் 10 இலட்சம் கொவிட் பரிசோதனைகளை முன்னெடுக்க தயார் - வைத்தியர் ரவி குமுதேஷ் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

நாடு முடக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் விஞ்ஞானபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் : அரசாங்கம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினால் 10 இலட்சம் கொவிட் பரிசோதனைகளை முன்னெடுக்க தயார் - வைத்தியர் ரவி குமுதேஷ்

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு நாடு முடக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் கொவிட் பரிசோதனைகளை பாரியளவில் விஸ்தரித்தல் உள்ளிட்ட விஞ்ஞானபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்குமாயின் குறுகிய காலத்திற்கு 10 இலட்சம் கொவிட் பரிசோதனைகளை முன்னெடுக்கும் சவாலை ஏற்பதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

நாடு முடக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுகாதார தொழிற்சங்கள், மதத் தலைவர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் முயற்சியின பின்னர் 10 நாட்களுக்கு நாடு முடக்கப்பட்டுள்ளது. இந்த 10 நாட்களையும் விஞ்ஞானபூர்வமான செயற்பாடுகளுக்காக பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். காரணம் 10 நாட்கள் என்பது மிகக் குறுகியதொரு காலம் ஆகும்.

நாட்டை முடக்குவதற்கு இப்போதாவது தீர்மானம் எடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றோம். எவ்வாறிருப்பினும் இது பெயரளவிலான தீர்மானமாக மாத்திரம் அமைந்து விடக்கூடாது. 10 நாட்கள் மாத்திரம் நாட்டை முடக்கி விட்டு, 10 நாட்கள் நிறைவடைந்த முதல் நாளிலேயே முடக்கத்தின் பிரதிபலன் கிடைத்ததா என்று கேட்கக்கூடாது. எம்மிடம் அவ்வாறு கேட்பதன் மூலம் இதனை பிரதிபலனை அடைய முடியாது.

எனவே இந்த 10 நாட்களுக்குள் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் விஞ்ஞானபூர்வமான 10 விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் பிரதானமானது கொவிட் பரிசோதனைகளின் அளவை பாரியளவில் அதிகரிப்பதாகும்.

ஒரு இலட்சம் கொவிட் பரிசோதனைகளை முன்னெடுக்கும் சவாலை சுகாதார சேவைகள் என்ற ரீதியில் நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பாகும்.

சுகாதார அமைச்சிற்கு உரித்துடைய இரசாயன ஆய்வு கூடங்கள் 35 உள்ளன. இந்த இரசாயன ஆய்வு கூடங்கள் நாளொன்று 8 மணித்தியாலங்கள் அதன் செயற்பாடுகளை முன்னெடுத்தால் கூட நாளொன்றுக்கு 1000 என்ற அடிப்படையில் 35000 பரிசோதனைகளை செய்ய முடியும். எனினும் இந்த இரசாயன ஆய்வு கூடங்களை 24 மணித்தியாலங்களும் செயற்படுத்த நாம் தயாராக இருக்கின்றோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment