பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃபின் தொலைபேசியை ஒட்டு கேட்ட RAW - நடந்தது என்ன ? - News View

Breaking

Friday, July 23, 2021

பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃபின் தொலைபேசியை ஒட்டு கேட்ட RAW - நடந்தது என்ன ?

சைபர் உளவு தொடர்பான சர்ச்சை இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ, பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேவு பார்க்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில், கார்கில் போரின் போது பாகிஸ்தான் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபின் தொலைபேசியை இந்தியாவின் உளவு அமைப்பான ரா (RAW) ஒட்டுக் கேட்ட வரலாறை நினைவு கூர்வோம்.

மே 26, 1999 அன்று, இரவு 9.30 மணிக்கு, இந்திய ராணுவ தலைமை ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக்கின் பாதுகாப்பான உள் இணைப்பகத் தொலைபேசி மணி ஒலித்தது. மறுமுனையில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ராவின் செயலாளர் அரவிந்த் தவே.

பாகிஸ்தானின் இரண்டு உயர்மட்ட தளபதிகளிடையிலான உரையாடலைத் தனது அமைப்பு பதிவு செய்துள்ளதாக அவர் ஜெனரல் மாலிக்கிடம் தெரிவித்தார்.

அந்த இருவரில் ஒருவர், சீனாவுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர். பின்னர் அவர் அந்த உரையாடலின் பகுதிகளைப் படித்து அதை ஜெனரல் மாலிக்கிடம் விவரித்தார், அதில் மறைந்துள்ள தகவல்கள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறினார்.

அந்தத் தொலைபேசி அழைப்பை நினைவு கூர்ந்த ஜெனரல் மாலிக் பிபிசியிடம், 'உண்மையில் தவே இந்த அழைப்பை டைரக்டர் ஜெனரல் மிலிட்டரி இன்டலிஜென்ஸுக்கு தான் செய்ய விரும்பினார். ஆனால் அவரது செயலாளர் தவறுதலாக என்னை இணைத்துவிட்டார். டிஜிஎம்ஐக்கு பதிலாக நான் இணைப்பில் இருப்பதை அவர் அறிந்ததும், அவர் மிகவும் சங்கடப்பட்டார். இந்தத் தொலைபேசி உரையாடலின் எழுத்து வடிவத்தை (டிரான்ஸ்ஸ்கிரிப்ட்) உடனடியாக எனக்கு அனுப்பும்படி அவரிடம் கேட்டேன்' என்று கூறினார்.

ஜெனரல் மாலிக் மேலும் கூறுகையில், "முழுவதையும் படித்த பிறகு, நான் அரவிந்த் தவேவைத் தொலைபேசியில் அழைத்து, இந்த உரையாடல் தற்போது சீனாவில் உள்ள ஜெனரல் முஷாரஃபுக்கும் மிக மூத்த ஜெனரலுக்கும் இடையிலானதாக நான் கருதுவதாகவும் இந்தத் தொலைபேசி எண்களின் உரையாடலைப் பதிவு செய்யுமாறும் பரிந்துரைத்தேன். அவரும் அவ்வாறே செய்தார்" என்று அவர் கூறினார்.
போரில் இதைச் சாதகமாக்கிக் கொள்ள ராவின் முயற்சி
"மூன்று நாட்களுக்குப் பிறகு ரா அமைப்பு இருவருக்கும் இடையில் மற்றொரு உரையாடலைப் பதிவு செய்தது. ஆனால் இந்த முறை அதை டிஜிஎம் ஐ-யுடனோ என்னுடனோ பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக, அவர் நேரடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி ஆகியோருக்கு அனுப்பினார். ஜூன் 2 அன்று, நான் கடற்படை விழாவில் கலந்து கொள்ள பிரதமர் வாஜ்பேயி மற்றும் பிரஜேஷ் மிஸ்ராவுடன் மும்பைக்குச் சென்றபோது, ​​நான் திரும்பி வரும் வழியில் சமீபத்திய 'ஒட்டுக் கேட்புகள்' குறித்துப் பிரதமர் என்னிடம் கேட்டார்.

"பிரஜேஷ் மிஸ்ரா திரும்பியதும், உரையாடலின் டிரான்ஸ் ஸ்கிரிப்டை எனக்கு அனுப்பினார்" என்றார் ஜெனரல் மாலிக்.

இந்த சம்பவத்தின் போது கூட, எங்கள் உளவுத்துறை அனைவருடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்துவது வழக்கம் என்பது நிரூபணமாகிறது. அப்போதுதான் அவை பலனளிக்கும் என்கிறார்.
நவாஸ் ஷெரிஃபுக்கு அனுப்ப முடிவு
ஜூன் 1ஆம் தேதிக்குள், இந்த ஒலி நாடாக்கள் பிரதமர் வாஜ்பேயி மற்றும் பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவினரால் கேட்டு முடிக்கப்பட்டன.

ஜூன் 4 ம் தேதி, இந்த நாடாக்கள் அவற்றின் டிரான்ஸ்கிரிப்டுகளுடன் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டன. முஷாரஃபின் உரையாடலைப் பதிவு செய்வது இந்திய உளவுத்துறையின் ஒரு பெரிய சாதனை என்றால், அந்த நாடாக்களை நவாஸ் ஷெரீஃபுக்கு அனுப்புவது மட்டும் எளிதான செயலா என்ன?

இந்த முக்கியமான நாடாக்களுடன் இஸ்லாமாபாத்துக்கு யார் செல்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இஸ்லாமாபாத்துக்கு ரகசியப் பயணம்
இதற்காக, அப்போது ஆஸ்திரேலியாவில் இருந்த பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார் என்றும், இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் அவர் தடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவருக்கு இந்தியாவின் தூதர் அந்தஸ்து வழங்கப்பட்டது என்றும், இதனால் அவர் அந்தச் சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பெறுவார் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் குறிப்பிட்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர் விவேக் கட்ஜுவும் அவருடன் சென்றார்.

ஆர்.கே.மிஸ்ரா காலை 8:30 மணிக்கு நவாஸ் ஷெரீஃப்பை காலை உணவின் போது சந்தித்து, டேப்பைக் கேட்க வைத்து, டிரான்ஸ்ஸ்கிரிப்டை அவரிடம் ஒப்படைத்தார்.

அதேநாள் மாலையில், மிஸ்ராவும் கட்ஜுவும் டெல்லிக்கு வந்தனர். இந்த பயணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது, அது எங்கும் விவாதிக்கப்படவில்லை.

கொல்கத்தாவிலிருந்து வெளியான டெலிகிராப் நாளேடு, 4, ஜூலை, 1999 இதழில் 'டெல்லி ஹிட்ஸ் ஷெரீஃப் வித் ஆர்மி டேப் டாக்' என்ற தலைப்பில் பிரணய் ஷர்மாவின் ஒரு கட்டுரையை வெளியிட்டது.
இந்த விவரத்தை நவாஸ் ஷெரீஃபுக்கு விவரிக்க இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் கட்ஜுவை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பியதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுட்லுக் இதழில் 22 ஜூன் 2007 அன்று 'ரிலீஸ் ஆஃப் கார்கில் டேப் மாஸ்டர்பீஸ் ஆர் ப்ளண்டர்?' என்ற தலைப்பில் ராவின் முன்னாள் கூடுதல் செயலாளரான பி ரமண் எழுதிய ஒரு கட்டுரை வெளியானது. அதில் அவர், நவாஸ் ஷெரீஃப்பிடம் டேப்பை விவரித்தவர்களுக்கு அந்த டேப்பைக் கேட்டபின் அவரிடம் ஒப்படைக்காமல் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலையை தான் செய்யவில்லை என்று மிஸ்ரா பின்னர் மறுத்தார். விவேக் கட்ஜுவும் இதை பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை.

இதெல்லாமும் ரா செயலாளர் அரவிந்த் தவே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோரின் திட்டம்தான்.

இது சற்று வெளியானால்தான் இந்தியாவிடம் இதுபோன்ற இன்னும் பல நாடாக்கள் இருக்கக்கூடும் என்ற ஐயம் எழுந்து அது பாகிஸ்தான் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதற்கான திட்டம் இது.
பதிவுகள் பகிரங்கப்படுத்தப்பட்டன
நவாஸ் ஷெரீஃப் இந்த நாடாக்களைக் கேட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, ஜூன் 11, 1999 அன்று, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் இந்தியாவுக்கு வருவதற்குச் சற்று முன்பு, இந்தியா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி இந்த நாடாக்களைப் பகிரங்கப்படுத்தியது.

இந்த நாடாக்களின் நூற்றுக்கணக்கான பிரதிகள் தயாரிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஒவ்வொரு வெளிநாட்டுத் தூதரகத்திற்கும் அனுப்பப்பட்டன.

முஷாரஃபின் அலட்சியம்
இந்திய உளவுத்துறையினர் இந்தப் பணியை எப்படி நிறைவேற்றினார்கள் என்று வெளியிடத் தயங்குகிறார்களா?

இந்த வேலையில் சிஐஏ அல்லது மொசாட் இந்தியாவுக்கு உதவியிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பு நம்பியது. இந்த நாடாக்களைக் கேட்டவர்கள் இஸ்லாமாபாத் தரப்பில் குரல் தெளிவாக இருந்ததால் இது இஸ்லாமாபாத்திலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் நசீம் ஜெஹ்ரா தனது புத்தகத்தில், 'தனது ராணுவ அதிகாரிகளுடன் இப்படி திறந்த வெளியில் தொலைபேசியில் இதுபோன்ற ஒரு முக்கியமான உரையாடலை நடத்தியதன் மூலம், ஜெனரல் முஷாரஃப் தனது கவனக்குறைவுக்கான ஆதாரங்களைத்தான் அளித்துள்ளார். இந்த உரையாடல் கார்கில் நடவடிக்கையில் பாகிஸ்தானின் உயர் தலைமை எந்த அளவிற்கு ஈடுபட்டுள்ளது என்பதை பகிரங்கமாக நிரூபித்தது,’ என்று எழுதுகிறார்.

சுவாரஸ்யமாக, பர்வேஸ் முஷாரஃப், தனது சுயசரிதையான 'இன் தி லைன் ஆஃப் ஃபயர்' இல், இந்தச் சம்பவத்தை முற்றிலும் புறக்கணித்து விட்டார். இருப்பினும் அவர் பின்னர் பாகிஸ்தான் அதிபராக, இந்தியப் பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பருக்கு அளித்த பேட்டியில், இது குறித்த உண்மைகளை ஒப்புக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்தாஜ் அஜீஸுக்கு டெல்லியில் அசட்டையான வரவேற்பு
இந்த நாடாக்கள் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் டெல்லிக்கு வந்தபோது, பாகிஸ்தான் தூதரகத்தின் செய்தி ஆலோசகர் டெல்லி விமான நிலையத்தின் விஐபி லவுஞ்சில் மிகவும் பதட்டமாக அவருக்காகக் காத்திருந்தார்.

முஷாரஃப் - அஜீஸ் உரையாடல் தலைப்புச் செய்தியாக இருந்த குறைந்தது ஆறு இந்திய செய்தித்தாள்களையாவது அவர் கையில் வைத்திருந்தார். ஜஸ்வந்த் சிங் அஜீஸுடன் மிகவும் அசட்டையாகக் கைகுலுக்கினார்.

இந்த நாடாக்கள் உலகிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு, கார்கில் மோதலில் பாகிஸ்தான் பிரதமரின் நேரடி ஈடுபாடு இல்லை என்பதையும் ராணுவம் இது குறித்த தகவலை அவரிடமிருந்து மறைத்தே வைத்திருந்தது என்பதையும் உறுதிப்படுத்தியது.
ஒலி நாடாக்களை பகிரங்கப்படுத்தியதற்கு விமர்சனம்
இந்தியாவின் உளவுத்துறை வட்டாரங்களில் இந்த நாடாக்களை பகிரங்கப்படுத்தியதற்கான விமர்சனங்களும் எழுந்தன.

ராவின் கூடுதல் செயலாளராக இருந்த மேஜர் ஜெனரல் வி.கே.சிங், பிபிசியிடம், 'இந்த நாடாக்களை பகிரங்கப்படுத்துவதன் மூலம், இந்தியாவிற்கு அமெரிக்காவிடமிருந்து ஐ.நா விடமிருந்தும் என்ன நற்பெயர் கிட்டியதோ இல்லையோ, ஆனால் பாகிஸ்தானுக்கு, இஸ்லாமாபாத் - பீஜிங் இடையேயான செயற்கைக்கோள் இணைப்பைப் பற்றி தெரிந்தது.

இது ரா அமைப்பால் ஒட்டுக்கேட்கப்பட்டதால், அந்த இணைப்பு உடனடியாக முடக்கப்பட்டது. அந்த 'இணைப்பு' தொடர்ந்திருந்தால் இன்னும் எவ்வளவு முக்கியமான தகவல்களைப் பெற்றிருப்போம் என்று கற்பனை செய்வது மிகவும் கடினம்.' என்று தெரிவித்தார்.

சர்ச்சிலின் உதாரணம்
மேஜர் ஜெனரல் வி.கே. சிங் மேலும் கூறுகிறார், '1974 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எஃப்.டபிள்யூ விண்டர்போதமின்' அல்ட்ரா சீக்ரெட் 'புத்தகத்தை அந்த நேரத்தில் ரா அல்லது பிரதமர் அலுவலகம் படித்திருக்கவில்லை, இது முதன்முறையாக இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கியமான உளவுத்துறை ஆதாரத்தைக் குறிப்பிட்டுள்ளது.

பெரும் போரின் ஆரம்பத்தில், பிரிட்டன் ஜெர்மனியின் குறியீட்டுச் சாதனமான 'எனிக்மா' குறியீட்டை உடைத்திருந்தது. இந்த தகவல்கள் இறுதி வரை மறைத்து வைக்கப்பட்டிருந்தன, மேலும் ஜேர்மானியர்கள் யுத்தம் முழுவதும் 'எனிக்மா' ஐப் பயன்படுத்தினர், இதனால் முக்கியத் தகவல்களை பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையை அடைந்தன.

ஒருமுறை, மறுநாள் காலையில் ஜெர்மன் விமானப்படை கோவென்ட்ரி மீது குண்டு வீசப் போகிறது என்பதை பிரிட்டன் அறிந்திருந்தது. அந்த நகர மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் சர்ச்சில் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார், ஏனென்றால் அது ஜெர்மனிக்கு எனிக்மா தோல்வியடைந்ததாக ஐயத்தை எழுப்பும், அதைத் தொடர்ந்து எனிக்மா முடக்கப்படும். இதனால், அவர்களின் தகவல்கள் நம்மை வந்தடையாது என்று அவர் நினைத்தார்." என்கிறார் வி கே சிங்.
உளவியல் போரில் இந்தியாவின் நன்மை
ஆனால் மறுபுறம், ராவின் முன்னாள் கூடுதல் செயலாளர் பி ரமண் இந்த நாடாக்களை பகிரங்கமாக்குவது உளவியல் போரின் மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று கருதினார். ஊடுருவியவர்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் 'வழக்கமான' வீரர்கள் என்றும், முஷாரஃப் பலமுறை கூறி வருவது போல், ஜிஹாதி பிரிவினைவாதிகள் அல்ல என்ற நமது இராணுவத்தின் கூற்றை இது வலுப்படுத்தியது.

காஷ்மீரில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறியுள்ளது என்ற முடிவை எட்டவும், எப்படியாவது அவர்கள் இந்திய மண்ணிலிருந்து விலக வேண்டும் என்ற இந்தத் தகவல் அமெரிக்காவிற்கு எட்ட இது உதவியது.

இந்த நாடாக்கள் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் முஷாரஃப் ஆகியோரின் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை எழுப்பின. கார்கில் குறித்து முஷாரஃப் சொன்ன கதையை முற்றிலும் நிராகரிக்கும் பலர் இன்றும் பாகிஸ்தானில் உள்ளனர்.

இந்த ஒலி நாடாக்களை பகிரங்கப்படுத்தியதன் காரணமாக, உலகின் அழுத்தம் பாகிஸ்தானின் மீது அதிகரித்தது, அது கார்கிலிலிருந்து தனது வீரர்களை விலக்க வேண்டியிருந்தது என்பதை மறுக்க முடியாது.

No comments:

Post a Comment