ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள விரிவுரையாளர்கள், புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலில் இணக்கம் - News View

Breaking

Wednesday, July 28, 2021

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள விரிவுரையாளர்கள், புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலில் இணக்கம்

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலின்போது இணக்கம் காணப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

உத்தேச ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் தொடர்பில் ஆராயும் நோக்கிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் புலமைத்துவ சபை, கல்வித்துறை தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழு உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அச்சந்திப்பின்போது மேற்படி சட்டமூலம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, இராணுவத்தினர் உள்ளடங்கலாக பாதுகாப்புத் தரப்பினருக்கான கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்கக்கூடிய வகையில் இதுவரையான காலமும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் எவ்வாறு இயங்கியதோ, அதேபோன்று எதிர்வரும் காலத்திலும் அப்பல்கலைக்கழகம் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் இக்கலந்துரையாடலின்போது இணக்கம் காணப்பட்டது.

இதனை வெறுமனே வாய்வார்த்தையுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், மேற்படி உத்தேச சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு நடைமுறைச்சாத்தியமான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு இதில் கலந்துகொண்ட புத்திஜீவிகள் உடன்பட்டுள்ளனர்.

அதேவேளை நாட்டில் நடைமுறையிலிருக்கும் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொண்டு, அதன் மூலம் இலவசக் கல்விக் கட்டமைப்பில் தாக்கங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் அதனைத் தோற்கடிப்பதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

அதுமாத்திரமன்றி ஜனநாயகத் தன்மை வாய்ந்த சுபீட்சமான நாடொன்றில் காணப்பட வேண்டிய இலவசக் கல்விக் கட்டமைப்பை மென்மேலும் வலுப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு அவசியமான கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எமது கட்சி தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad