நாடு பல்துறைகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதால் அரசியல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

நாடு பல்துறைகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதால் அரசியல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது - சுசில் பிரேமஜயந்த

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாடு பல்துறைகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அரசியல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது என தொலைநோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு கூட்டணியின் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் இரு தரப்பினரும் செயற்படுவது பொறுத்தமற்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். 24 வருட காலமாக நிலவும் வேதன கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு முரண்பட்ட வகையில் சிறந்த தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இரு பிரதான தேசிய பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு இலத்திரனியல் முறைமை ஊடாக கற்பித்தல் செயற்முறை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய கல்வி நிறுவனம் தயாரித்த பாடத்திட்டங்கள் இலத்திரனியல் ஊடக முறைமை ஊடாக வார நாட்களில் மாலை 05.00 மணி தொடக்கம் 06.00 மணி வரை கணித பாடமும், காலை 08.00 மணி தொடக்கம் 1.30 மணி வரை ஏனைய பாடங்களையும் கற்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் வாரம் தொடக்கம் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கும், ஐந்தாம் தரபுலமைப்பரிசில் பரீட்சை, கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும், ஏனைய தர மாணவர்களுக்கு 6 தொலைக்காட்சி அலைவரிசை சேவை ஊடாக கற்பிக்கும் பாடத்திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை சாதகமான முறையில் நிறைவு பெற்றுள்ளதாக சுதந்திர கட்சியினர் குறிப்பிட்டுள்ளார்கள். கூட்டணியமைக்கும் போது குறிப்பிடப்பட்ட விடயங்கள் தற்போது செயற்படுத்தப்படவில்லை. என்று சுதந்திர கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட பிறகு தான் இவ்விரு தரப்பினருக்குமிடையில் கூட்டணி கைச்சாத்திடப்பட்டது என்பதை மறைக்ககூடாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு பல்துறைகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தல், பாடசாலைகளை மீள திறத்தல், பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்தல் என பல்வேறு அடிப்படை விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கூட்டணியின் இரு தரப்பினருக்குமிடையிலான முரண்பாடுகளுக்கு உயர்மட்டத்தில் முக்கியத்துவம் வழங்க முடியாது. கூட்டணியின் பிரச்சினைகளுக்கு இரு தரப்பினரும் கூட்டணியின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment