ஜனநாயக சார்பு “அப்பிள் டெய்லி” பத்திரிகை : தொடர்ந்தும் வேட்டையாடப்படும் ஊழியர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

ஜனநாயக சார்பு “அப்பிள் டெய்லி” பத்திரிகை : தொடர்ந்தும் வேட்டையாடப்படும் ஊழியர்கள்

ஹொங்கொங்கில் அமுலாக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்போது பிரசுரங்கள் நிறுத்தப்பட்டு செயற்படாத ஜனநாயக சார்பு அப்பிள் டெய்லி பத்திரிகையின் மூன்று மூத்த ஊழியர்களை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அப்பிள் டெய்லி பத்திரிகையின் நிறுவனத் தலைவர் ஜிம்மி லேயை ஹொங்கொங் பொலிஸார் கைது செய்தனர். இந்த பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் ரயான் லா (வயது 47) மற்றும் நிர்வாக இயக்குனர் கிம் ஹங் (வயது 59) முன்னாள் இணை வெளியீட்டாளர் சான் புய்-மேன் மற்றும் ஆங்கில செய்தி பிரிவின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஃபுங் வை-காங் உள்ளிட்டவர்கள் முதலில் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஹொங்கொங் நிர்வாகம் எடுத்தது. இதற்கிடையில் பத்திரிக்கையின் 18 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் அப்பிள் டெய்லி பத்திரிக்கை தனது பதிப்பை ஜுன் 26ஆம் திகதி முதல் தனது அச்சுப்பதிப்பை நிறுத்தியது.

மேலும், சீன அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கட்டுரை எழுதிய இந்த பத்திரிகையின் அலுவலகம் 500 சீன பொலிஸாரால் சோதனையிடப்பட்டது.

கைது செய்யப்பட்ட இந்த பத்திரிகையின் ஆசிரியர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைகளை ஒன்றரை மாதங்கள் முன்னெடுப்பதற்கு அனுமதி அளித்ததோடு எதிர்வரும் ஓகஸ்ட் 13ஆம் திகதியே மீண்டும் வழக்கு விசாரணையை எடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில்தான், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதற்காக வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச்சதி செய்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் நிர்வாக ஆசிரியர் லாம் மன்-சுங்கையும் தேசிய பாதுகாப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரது கைது பற்றி உறுதிப்படுத்தியுள்ள ஹொங்கொங் ஃப்ரீ பிரஸ் ஊடகமானது, பொலிஸார் லாம் மன்-சுங்கை கைது செய்வதற்காக முதலில் அவரது வீட்டில் தேடியதாகவும் அவரை பிறிதொரு இடத்தில் வைத்து கைது செய்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை நன்கு அறிந்த ஒருவராக உள்ளார். இறுதியாக அச்சிட்ட செய்தித்தாளின் பிரதியை மேற்பார்வையிட்ட பின்னர் லாம் நிர்வாக ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹொங்கொங் நிர்வாகத்தின் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து கடந்த மாதம் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு அப்பிள் டெய்லி தள்ளப்பட்டது. அதன் பின்னர் அதன் முன்னாள் ஊழியர்களை சீன சார்பு அதிகாரிகள் தொடர்ந்து குறி வைத்து வருகின்றனர்.

ஜனநாயக ஆதரவு பத்திரிகையான அப்பிள் டெய்லி பத்திரிக்கை உலகம் முழுவதும் ஜனநாயக ஆதரவாளர்களால் அதிகமாக வரவேற்கப்படுவதாக உள்ளது.

சீன அரசியல் சாசனத்தை விமர்சிக்கும் வகையில் இந்த பத்திரிகையில் பலவித கட்டுரைகள் வெளியானதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கம்யூனிச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஹொங்கொங் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எனினும், கடந்த ஜுன் 26ஆம் திகதிக்குப் பின்னர் அப்பிள் டெய்லி டிஜிட்டல் வடிவில் பலத்த சவால்களுக்கு மத்தியில் இன்னமும் வெளியிடப்பட்டு வருகின்றது.

இதன் காரணத்தினாலேயே தற்போது அந்த பத்திரிகையின் இரகசியங்கள் அனைத்தும் தெரிந்தவர் என்ற நோக்கில் நிர்வாக ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்தக் கைதானது, டிஜிட்டல் வடிவத்தினையும் ஒழிக்கும் ஒரு செயற்பாடாக இருக்குமோ என்று உலகளாவிய ரீதியில் உள்ள ஜனநாயக செயற்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நன்றி: ஏ.என்.ஐ
தமிழில் ஆர்.ராம்

No comments:

Post a Comment