ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது - News View

Breaking

Friday, July 23, 2021

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது

(எம்.மனோசித்ரா)

விசேட அதிரடிப் படையினரால் நேற்று வியாழக்கிழமை அத்ஹிட்டிய மற்றும் நாரம்மல ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்புக்களில் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று வியாழக்கிழமை போதைப் பொருள் தொடர்பில் விசேட அதிரடிப் படையினரால் பல சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய அத்ஹிட்டிய பிரதேசத்தில் 400 கிராம் ஹெரோயினுடன் 32 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 94,040 ரூபா பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் போதைப் பொருளை பொதியிடப் பயன்படுத்தப்படும் கடதாசிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபாய் ஆகும்.

இது தவிர விசேட அதிரடிப் படையினரால் நாரம்மல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 30 கிராம் ஹெரோயின், 805 கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகனத்தில் பயணித்தபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவ்வாறு போதைப் பொருட்களுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடைய கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களின் பெறுமதி 83 இலட்சத்து 50,000 ரூபாவாகும்.

அத்ஹிட்டிய மற்றும் நாரம்மல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு பிரதேசங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களின் மொத்த நிறை 1,235 கிராம் ஆகும். இதன் மொத்த பெறுமதி ஒரு கோடியே 23 இலட்சத்து 50,000 ரூபாவாகும். இது தொடர்பில் விசேட அதிரடிப் படையினருடன் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad