உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரம் வளர்ச்சியில் என்கிறார் பந்துல - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரம் வளர்ச்சியில் என்கிறார் பந்துல

(இராஜதுரை ஹஷான்)

உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரமானது 31 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளமை நாடு என்ற ரீதியில் பெற்றுக் கொண்டுள்ள பாரியதொரு வெற்றியாகும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் 2021ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட ஏற்றுமதி அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையான ஏற்றுமதி வருமானம் 2021 ஜனவரி தொடக்கம் மே மாதம் வரை 32.6 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

2020 ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதிக்குள் காணப்பட்ட சேவை ஏற்றுமதி வருமானம் இந்த வருடம் குறித்த காலப்பகுதிக்குள் 27.3 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. எனவே இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 31 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் ஏற்றுமதி துறைகளை அபிவிருத்தி செய்வதற்காக அந்தந்த துறைகளின் நிபுணத்துவம் கொண்டவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி மேலும் ஏற்றுமதி வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்வதேச சந்தை வாய்ப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அமைச்சரவை அனுமதியின் பின்னர் ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் உலக சந்தையில் எவ்வித தடைகளுமின்றி சிறு மற்றும் மத்திய தர உற்பத்தியாளர்களுக்கு செயற்பட முடியும்.

அதேபோல் சர்வதேச வர்த்தக பரிமாற்றம் மத்திய நிலையத்தை இலங்கைக்குள் உருவாக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அத்தியாவசிய அளவுகோள் மற்றும் சாத்தியமான ஆய்வு ஊடாக மிகவும் பொருத்தமானதென முடிவு செய்யப்பட்டுள்ள தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன அதிவேக நுழைவாயுக்கருகில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பரிமாற்ற நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடை உற்பத்தி பொருள்கள் அதிகமாக அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது அமெரிக்காவில் இதற்காக தனியான விசேட களஞ்சியசாலையை அமைக்க ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் சிறு மத்திய ஆடை உற்பத்தியாளர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment