தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களில் ஒட்சிசன் தேவையுடையோர் எண்ணிக்கை அதிகரிப்பு : டெல்டா வைரஸ் பரவல் தொடர்பான எச்சரிக்கையாகவே நாம் இதைக் கருத வேண்டும் - அமைச்சர் சன்ன ஜயசுமன - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 28, 2021

தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களில் ஒட்சிசன் தேவையுடையோர் எண்ணிக்கை அதிகரிப்பு : டெல்டா வைரஸ் பரவல் தொடர்பான எச்சரிக்கையாகவே நாம் இதைக் கருத வேண்டும் - அமைச்சர் சன்ன ஜயசுமன

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களில் ஒட்சிசன் தேவையுடையோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. டெல்டா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான எச்சரிக்கையாகவே நாம் இதைக் கருத வேண்டும் என்று ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை சீனாவிலிருந்து நாட்டை வந்தடைந்த சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பொறுப்பேற்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக வழங்குவதற்கு குறிப்பிட்டதொரு கால இடைவெளி காணப்படுகிறது. உதாரணமாக சைனோபார்ம் தடுப்பூசியை முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு 6 வாரங்களின் பின்னர் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றா விட்டால் டெல்டா வைரஸ் தொற்றுக்கு கூட உள்ளாகக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் துரதிஷ்டவசமாக ஆசிரியர்கள் பல பகுதிகளிலும் ஒன்றுகூடி பாரிய போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய அபாயத்தில் அவர்கள் உள்ளனர்.

தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களில் ஒட்சிசன் தேவையுடையோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. டெல்டா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான எச்சரிக்கையாகவே நாம் இதைக் கருத வேண்டும்.

எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது அநாவசியமாக ஒன்று கூடுவது பொறுத்தமான செயற்பாடு அல்ல. இது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் நேரம் அல்ல. நாடு பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது என்பது மறைக்கக் கூடிய விடயமல்ல.

நிலைமையை உணர்ந்த கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். கொவிட் வைரஸ் முற்றாக ஒழிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment