ஹிஷாலினி தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் : சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற காரணம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Monday, July 26, 2021

ஹிஷாலினி தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் : சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற காரணம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் கட்சி என்ற வகையில், அண்மையில் ஹிஷாலினி என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை முன்னெடுத்து, அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் எமது நாட்டில் நடைமுறையிலிருக்கும் சட்டங்களில் காணப்படும் குறைபாடுகளே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அச்சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு என்பது எமது நாட்டில் உயர்ந்தபட்ச முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களாகும். இருப்பினும் அண்மைக் காலங்களில் பதிவாகியுள்ள சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது பெண்கள், தாய்மார் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் யுகத்திலேயே நாம் வாழ்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் தற்போது நடைமுறையிலிருக்கும் கொள்கைகள் மற்றும் சட்ட திட்டங்களில் காணப்படும் குறைபாடுகளே இதற்கு முக்கிய காரணமாகும்.

இவ்விடயம் தொடர்பில் நாட்டில் காணப்படும் சட்டவரையறைகள் எவ்வகையிலும் போதுமானவை அல்ல. எனவே அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, அதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளையும் துஷ்பிரயோகங்களையும் முடிவிற்குக் கொண்டுவர வேண்டும்.

எனவே இவ்விவகாரம் தொடர்பில் நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் சட்ட திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment