கைது செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் : பாராளுமன்றத்தில் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

கைது செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் : பாராளுமன்றத்தில் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி யார் செயற்பட்டாலும் தராதரங்கள் பார்க்காது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அவ்வாறு செயற்படுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானபோது, நேற்றுமுன்தினம் 37 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் எதிர்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தராதரம் எதுவாக இருந்தாலும் சட்டத்தை மீறினால் அதற்கு இடமளிக்க முடியாது. தற்போது கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளரே தடை செய்துள்ளார். அவரே பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய அவருக்கு அந்த உத்தரவை செய்யலாம். அந்த உத்தரவையே பொலிஸார் செயற்படுத்துகின்றனர். இதன்படி கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுமாக இருந்தால் தராதரம் பார்க்காது அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவில், மக்கள் அதிகளவில் கூடும் பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகளால் கொவிட்19 தொற்றுப் பரவும் அபாயம் உள்ளது. அதனால் அவ்வாறாக மக்கள் அதிகளவில் கூடும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாதென்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அவர் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கமைய அவ்வாறான உத்தரவை வழங்க, விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிக்கு அதிகாரமுள்ளது. இதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அந்த உத்தரவை வழங்கியுள்ளார். அந்த உத்தரவை பொலிஸார் செயற்படுத்துகின்றனர்.

இதன்படி பொலிஸார் தொடர்ந்தும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்துவதுடன் அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்வர். அதன்பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர். அதனை தொடர்ந்து பிணை வழங்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகர்களே தீர்மானிப்பார்கள்.

அதன்போது அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதா? என்டிஜன் பரிசோதனைகளை நடத்துவதா? அவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதா? என்றும் மத்திய நிலையங்களுக்கு அனுப்புவதா? என்றும் தீர்மானிப்பர். 

இதன்படிதான் நேற்று (நேற்று முன்தினம்) கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்படும் போது நீர்கொழும்பில் வைத்து அவர்களுக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட அனைத்தும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என்பதனை மிகவும் தெளிவாக கூறிக்கொள்கின்றோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment