ஜனாதிபதி எரிபொருள் விலை குறித்து ஒரு தீர்வை எடுப்பார் - பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள், தற்போது பகிரங்கப்படுத்த முடியாது : நிதி அமைச்சர் பஷில் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 10, 2021

ஜனாதிபதி எரிபொருள் விலை குறித்து ஒரு தீர்வை எடுப்பார் - பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள், தற்போது பகிரங்கப்படுத்த முடியாது : நிதி அமைச்சர் பஷில்

(இராஜதுரை ஹஷான்)

சகல பொருளாதார காரணிகளையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி எரிபொருள் விலை குறித்து ஒரு தீர்வை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் கடினமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எமது கட்சியின் கொள்கையான பெறுபேறு பொருளாதாரத்தின் முன்னேற்றமாக அமையும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிதியமைச்சராக பதவியேற்றதன் பின்னர், பெல்லன்வில ரஜமஹா விகாரையில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுமக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் .

சகல பொருளாதார காரணிகளையும் கருத்திற் கொண்டு எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி சிறந்த தீர்வை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் பொருளாதார ரீதியில் பல கடுமையான தீர்மானங்களையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை தற்போது பகிரங்கப்படுத்த முடியாது. எமது திட்டங்கள் செயற்பாட்டு ரீதியில் வெளிப்படும்.

பொதுஜன பெரமுனவின் கொள்கை பெறுபேறாக காணப்பட்டது. அனைத்து விடயங்களிலும் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னேற்றமடைந்துள்ளோம். ஆகவே பொருளாதாரத்தையும் எம்மால் மேம்படுத்த முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad