அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்...! மக்களுடன் மக்களாக வீதிகளில் இறங்கிப் போராடுவோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரை - News View

Breaking

Post Top Ad

Thursday, July 8, 2021

அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்...! மக்களுடன் மக்களாக வீதிகளில் இறங்கிப் போராடுவோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரை

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களின் மீது பிரயோகிக்கப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைந்து பாராளுமன்றத்திற்கு முன்னால் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அநீதி இழைக்கப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவோம். இப்போராட்டங்களை இத்துடன் நிறுத்தி விடமாட்டோம். நாட்டு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் வரையில் நாம் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மக்களுடன் மக்களாக வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்று தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, எமது ஜனநாயக உரிமையை வெளிக்காட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றோம். 
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுகின்ற ஜனநாயக மற்றும் சிவில் சமூகத் தரப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான பணிப்புரைகளையும் கட்டளைகளையும் விதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையை அவதானித்திருக்கின்றோம்.

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமைகள் இந்த நாட்டில் வாழும் அனைத்துப் பிரஜைகளுக்கும் இருக்கின்றது. எந்தவொரு அரசாங்கத்தினாலும் அவற்றைப் புறக்கணிக்கவோ அல்லது அடக்குமுறைக்கு உட்படுத்தவோ முடியாது. 

நாட்டு மக்களின் வயிற்றுப் பசியை மேலும் அதிகரிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருப்பதனாலேயே நாம் இப்போது போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலையேற்பட்டிருக்கின்றது.
எரிபொருள் விலை குறைப்பு, உரத்தைப் பெற்றுக் கொடுத்தல், மீனவர்களுக்குரிய நிவாரணத்தை வழங்கல், சூழல் பாதிப்புக்களுக்கான இழப்பீட்டை வழங்கல், கல்வி நடவடிக்கைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்தல், தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, கொரோனா கொத்தணி உருவாகாத வகையில் தமது அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்கு இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. 

அந்த வகையில் நாம் அநீதி இழைக்கப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீதிகளில் இறங்கிப் போராடுவோம். இந்தப் போராட்டங்களை இத்துடன் நிறுத்தி விடமாட்டோம். நாட்டு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் வரையில் நாம் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மக்களுடன் மக்களாக வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்று தெரிவித்தார்.
அதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, 'அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் ஊடகங்களின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் ஆகியவற்றுக்கு எதிராகவே நாம் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றோம். 

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று பொலிஸ்மா அதிபரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம். 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சாதாரண பொதுமக்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, இயலுமானால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்மைக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோருகின்றோம்' என்று குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உரம் இல்லாததன் காரணமாக விவசாயிகளின் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் பாதிப்படைந்திருக்கும் நிலையில் விவசாயிகளும் மேலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். 

அதனைக் கண்டு அரசாங்கம் அச்சமடைந்திருக்கிறது. அதனால் கொரோனா வைரஸ் பரவலை காரணமாகக் கூறி, வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவில் உரிமைகளைப் பாதுகாப்போம், ஆர்ப்பாட்டங்களைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றதா?, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம், ஊடங்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப்பேணல் உள்ளிட்ட சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad