சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார் ஜீ.எல். பீரிஸ் - ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 27, 2021

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார் ஜீ.எல். பீரிஸ் - ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நேற்றையதினம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையொன்று இன்றையதினம் காலை ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், அதற்கிணங்க மாணவர்களை பாதிப்புகளுக்கு உள்ளாக்காமல் ஒன்லைன் கல்வியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறும் ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவு பெற்றுவிடும் என தெரிவித்துள்ள அமைச்சர், செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது கல்வித்துறை சார்ந்த 77 வீதமானவர்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இரண்டாவது தடுப்பூசிகளும் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment