பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியடைந்தோம் : அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 8, 2021

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியடைந்தோம் : அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியடைந்தோம் என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

நிறைவடைந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.திமு.க தோல்வியடைந்து. தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 

இந்நிலையில் அ.தி.மு.க.வின் செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் குருவம்மாப்பேட்டை என்னும் கிராமத்தில் நடைபெற்றது. 

அதன்போது மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியதாவது, ‘தி.மு.க.வினர் மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர். தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பெருவாரியான பொதுமக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை, மாற்றத்தை விரும்பிய மக்கள், நாம் எடுத்த முடிவுகள் ஆகியனவும் காரணமாயிற்று. முடிவு என்றால் கூட்டணி. 

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், நாம் மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்போம். ஆனால் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பா.ஜ.க. கூட்டணிதான். இதனால் முழுமையாக நாம் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து விட்டோம்.

சிறுபான்மையினர் மக்களுக்கு நம் மீதோ, நம் இயக்கத்தின் மீதோ எந்த வருத்தமும், கோபமும் இல்லை. கொள்கை ரீதியாக அவர்கள் பா.ஜ.க.வோடு முரண்பட்டிருந்தார்கள். அவர்கள் பா.ஜ.க.வை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நாம் அவர்களோடு வைத்த கூட்டணியால் மிகப்பெரிய இழப்பை நாம் சந்திக்க நேரிட்டது. இதற்கு ஒரே உதாரணம் நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதி.

விழுப்புரம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளது. இதில் 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் உள்ளது. ஆனால் 300 வாக்குகள் கூட எனக்கு கிடைக்கவில்லை. 16 ஆயிரம் வாக்குகள் நகரத்தில் குறைந்திருந்தாலும், கிராமங்களில் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். இந்த உதாரணம்தான் தமிழகம் முழுவதிலும் நடந்தது. இந்த வாக்குகள் மாறியிருந்தால் நிலைமை வேறு, ஆட்சியே வேறு.

பா.ம.க. கட்சியோடு கூட்டணி இருந்த காரணத்தால் நாம் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை நம்மால் பெற முடியவில்லை. அது அவர்களுக்குள் கொள்கை ரீதியான முரண்பாடு. ஆனால் கூட்டணி கட்சியில் எல்லோரும் நன்றாக செயல்பட்டோம். அதனால்தான் இந்த நிலையிலும் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

இதனிடையே அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

அதில்,' தேச நலன் கருதியும், தமிழ் நாட்டின் நலன் கருதியும், அ.தி.மு.க - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தொடரும். இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும், அ.தி.மு.க முழு நம்பிக்கை வைத்துள்ளது.' என தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment