(எம்.ஆர்.எம்.வசீம்)
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 50 க்கும் அதிகமான வாக்கு மூலங்கள் அவரிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் மீது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரத்தில் ஒரேயொரு குற்றச்சாட்டே சுமத்தப்பட்டுள்ளது.
அந்த குற்றச்சாட்டு பாரதூரமற்றது என்பதை நிரூபிக்க முடியும் என சட்டத்தரணிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதனால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என தேசிய ஐக்கிய முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 50 க்கும் அதிகமான வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாக எமது சட்டத்தரணிகள் மூலம் அறியக்கிடைக்கின்றது. இந்நிலையில் அவர் மீது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரத்தில் ஒரேயொரு குற்றச்சாட்டே சுமத்தப்பட்டுள்ளது.
அவர் ஊடக சந்திப்பொன்றில் ஷரீஆ சட்டம் முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானது என்ற தொனியில் பேசிய விடயமே குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற பல விடயங்களை இதற்கு முன்பு பேசி மக்களை வன்முறைக்கு தூண்டிவிட்ட பலர் இன்றும் சுதந்திரமாக நடமாடித் திரிகிறார்கள்.
மேலும் அசாத் சாலி கைது செய்யப்பட்ட போது பாராளுமன்றத்திலும் வெளியிலும் சம்பந்தப்பட்ட அமைச்சரும், அதிகாரிகளும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களுடன் அசாத் சாலி தொடர்பு கொண்டிருந்தார் என்றே தெரிவித்து வந்தார்கள். ஆனால் அது பொய்யென தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தில் அது பற்றி ஒரு வார்த்தை கூட பிரஸ்தாபிக்கப்படவில்லை.
அத்துடன் தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமற்றவை என நிரூபிக்க முடியும் என சட்டத்தரணிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் அசாத் சாலி பிணையிலோ அல்லது நிரந்தரமாகவோ வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுண்டு.
உச்ச நீதிமன்றில் அசாத் சாலியின் சட்டத்தரணிகள் முன்வைத்த காத்திரமான வாதங்கள் அவற்றுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய பாரபட்சமற்ற பதில்கள் என்பன காரணமாகத்தான் இப்போது அசாத் சாலிக்கு எதிரான குற்றப்பத்திரம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனால் தற்போது இந்த விடயம் மேல் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த நாட்டின் சட்டத்துறை மீதும், நீதிமன்ற கட்டமைப்பின் நடுநிலைத்தன்மை மீதும் தொடர்ந்தும் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம்.
No comments:
Post a Comment