ஜனாஸா நல்லடக்க பணியில் இராணுவத்தினர் தங்களது உயிரினையும் பொறுப்படுத்தாது இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர் : அரசாங்கத்தினால் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது - ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் - News View

About Us

About Us

Breaking

Monday, July 5, 2021

ஜனாஸா நல்லடக்க பணியில் இராணுவத்தினர் தங்களது உயிரினையும் பொறுப்படுத்தாது இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர் : அரசாங்கத்தினால் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது - ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கொவிட்-19 ஜனாஸா நல்லடக்க விடயத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு பிரிவினர், சுகாதார பிரிவினர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் சூடுபத்தினசேனை பகுதியில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவிக்கும் போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஓட்டமாவடி பிரதேசத்தில் சூடுபத்தினசேனை பகுதியில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்க பணியில் இராணுவத்தினர் தங்களது உயிரினையும் பொறுப்படுத்தாது இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர். 

அத்தோடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரது பங்களிப்பும், இவ்வாறே அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.

ஜனாஸா நல்லடக்க விடயத்தினை கருத்தில் கொண்டு குறித்த இடத்தினை அபிவிருத்தி செய்யும் வகையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் திண்மக்கழிவு அகற்றல் நடவடிக்கைக்கு அரசாங்கத்தினால் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
அத்தோடு இருபத்தைந்து கிலோ மீற்றர் வீதிகளை கொங்கிறீட் வீதிகளாக அமைக்கவும் இந்த அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது. அந்த வகையில் வடமுனை, ஊத்துச்சேனை, வாகனேரி, காவத்தமுனை, மஜ்மா நகர் உட்பட்ட பகுதிகளின் கொங்கிறீட் வீதிகள் அமைக்கப்படவுள்ளது.

எமது நாட்டில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், பாதுகாப்பு பிரிவினர், சுகாதார பிரிவினர் ஆகியோருக்கு ஓட்டமாவடி பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச மக்கள் மற்றும் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்க குழுவினர் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனாஸா நல்லடக்கம் செய்யும் பொது மயானத்தினை நாட்டின் உள்ளுராட்சி மன்ற சட்டத்திற்கமைய பராமரிக்கும் பொறுப்பு பிரதேச சபைக்கு உள்ளது. அந்த அடிப்படையில் ஜனாஸா நல்லடக்கம் செய்யும் இடத்தினை அடையாளப்படுத்திக் கொள்வதில் தவிசாளராகிய நானும், செயலாளரும் கிழக்கு மாகாண இராணுவ அதிகாரியின் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம். எனவே இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு உள்ளது என்றார்.

இக்கூட்டத்தில் பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதேச சபை உறுப்பினர்கள், ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்குடாத் தொகுதி முஸ்லிம் பகுதி சிவில் அமைப்புக்களின் பிரிதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment