புத்தளம் நகர சபை மீண்டும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது - News View

About Us

About Us

Breaking

Thursday, July 1, 2021

புத்தளம் நகர சபை மீண்டும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது

புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ரபீக் இன்று (01.07.21) தெரிவு செய்யப்பட்டார்.

புத்தளம் நகர சபையின் தலைவராக செயற்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி திடீர் விபத்தொன்றில் உயிரிழந்தமையையடுத்து, புத்தளம் நகர சபையின் உப தலைவரான சுஷாந்த புஷ்பகுமார ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை பதில் தலைவராக செயற்பட்டு வந்தார்.

இந்நிலையில் புத்தளம் நகர சபையில் ஏற்பட்ட தலைவர் பதவி வெற்றிடத்திற்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான தெரிவு இன்று (01.07.2021) காலை 10.30 மணிக்கு சபா மண்டபத்தில் வடமேல் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஐ.எம்.இளங்ககோன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, அனைவரினதும் விருப்பத்துடன், புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ரபீக் போட்டியின்றி தெரிவானார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளையும் ஒரு சுயேட்சைக் குழுவையும் உள்ளடக்கிய வகையில் 19 உறுப்பினர்களைக் கொண்ட புத்தளம் நகர சபையின் ஆட்சி மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது.

இவ்வாறு புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ரபீக் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் புத்தளம் நகர சபைக்கு முன்னால் ஒன்றுகூடி புதிய தலைவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அத்தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் புத்தளம் நகர சபையின் புதிய தலைவருக்கு நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment