நாட்டின் கலைத்துறையை மீட்டெடுக்க நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அவசியம் : சிறையிலுள்ள அவரை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் - கூட்டாக கோரிக்கை விடுத்துள்ள இலங்கையின் திரைத்துறையினர் - News View

Breaking

Thursday, July 29, 2021

நாட்டின் கலைத்துறையை மீட்டெடுக்க நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அவசியம் : சிறையிலுள்ள அவரை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் - கூட்டாக கோரிக்கை விடுத்துள்ள இலங்கையின் திரைத்துறையினர்

(நா.தனுஜா)

நாட்டின் கலைத்துறை மிக மோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், அதனை மீட்டெடுப்பதற்கு நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றும் அவரை சிறையில் அடைத்து வைத்து கலைத்துறையை முன்நகர்த்திச் செல்வது கடினம் என்றும் இலங்கையின் திரைத்துறையின் முன்னணிக் கலைஞர்கள் ஒன்றிணைந்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை வலியுறுத்தி, நாட்டின் திரைத்துறையின் முன்னணிக் கலைஞர்கள் ஒன்றிணைந்து கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர்.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நடிகர் அர்ஜுன் கமலநாத் பின்வருமாறு கூறினார். பல்வேறு விதமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட கலைஞர்கள் இப்போது ரஞ்சன் ராமநாயக்கவிற்காக ஒன்றிணைந்திருக்கின்றார்கள். அவருடன் நான் பல வருட காலமாகப் பேணிய தொடர்பின் அடிப்படையில் நோக்குகையில், எத்தகைய பிரச்சினைகள் என்றாலும் அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டிய ஒருவரா? என்ற கேள்வி என்னுள் எழுகின்றது. நான் நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கின்றேன். ஆகையினால் அது குறித்து எதனையும் பேசவிரும்பவில்லை.

நாமனைவரும் ஒத்த தன்மையுடையவர்கள் அல்ல. அதேபோன்று ரஞ்சன் ராமநாயக்கவும் மிகுந்த கலைத்திறனையும் விரைவில் ஆவேசமடையும் தன்மையையும் கொண்டவராவார். அதுமாத்திரமன்றி யாரையும் உடன்கொண்டிராத, சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான நிலைப்பாட்டைக் கொண்ட நபராவார். அவர் சுதந்திரத்தை அதிகமாக விரும்பியதன் காரணமாக குடும்பக் கட்டமைப்பிற்குள் நுழையவில்லை. எனவே எந்தவொரு விடயத்தைச் செய்யும்போதும் அல்லது பேசும்போதும் இருமுறை சிந்திக்கும் நிலையில் அவர் இருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது நாட்டின் கலைத்துறை மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அதனை மீட்டெடுப்பதற்கு ரஞ்சன் ராமநாயக்கவின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.

ரஞ்சன் ராமநாயக்க கலைத்துறையின் 'சூப்பர் ஸ்டார்' ஆவார். அவரை சிறையில் அடைத்து வைத்து இந்தத் துறையை முன்கொண்டு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment